‘ஃபாஸ்ட் புட்’ மற்றும் ‘குயிக் மீல்ஸ்’ என்ற பெயரில் எங்கும் விரைவு மயமாகிவிட்ட இந்தக் காலகட்டத்தில், நாம் எதை உண்கிறோம் என்பதை விட, எப்படி உண்கிறோம் என்பதில்தான் அதிக ஆபத்து ஒளிந்திருக்கிறது. நேரத்தைச் சேமிப்பதாக நினைத்துக்கொண்டு கைபேசி அல்லது தொலைக்காட்சியைப் பார்த்தபடி இயந்திரத்தனமாக உணவை விழுங்கும் பழக்கம், நம் உடலுக்குள் கண்ணுக்குத் தெரியாத பல ஆரோக்கியச் சிதைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒரு சாதாரண பழக்கமாகக் கடந்து போகாமல், ஒரு தீவிர உடல்நல அபாயமாகப் பார்க்க வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
ஊட்டச்சத்து குறித்த ‘ஃப்ரான்டியர்ஸ்’ (Frontiers) அமைப்பு மேற்கொண்ட ஆய்வின்படி, அவசர அவசரமாக உண்பது உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகளை (Metabolic Syndrome) உண்டாக்குகிறது. இது காலப்போக்கில் இதய நோய்கள் மற்றும் நீரிழிவு பாதிப்பிற்கு வித்திடுகிறது. மேலும், 2024-ஆம் ஆண்டு ‘நேச்சர்’ (Nature) இதழ் வெளியிட்ட ஆய்வறிக்கையில், உணவைச் சரியாக மென்று உண்ணாமல் விழுங்குபவர்களுக்குக் கல்லீரலில் கொழுப்பு படியும் (Fatty Liver) அபாயம் அதிகம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உணவை வாயிலேயே நன்றாக அரைக்காமல் வயிற்றுக்குள் தள்ளும்போது, செரிமான மண்டலம் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகிறது.
உணவை மெதுவாக மென்று உண்ணும்போது மட்டுமே குடலுக்கும் மூளைக்கும் இடையிலான சமிக்ஞைகள் சரியாக வேலை செய்யும். நாம் போதுமான அளவு உண்டுவிட்டோம் என்ற திருப்தி நிலையை (Satiety) மூளை உணர்வதற்கு சுமார் 20 நிமிடங்கள் வரை ஆகும். ஆனால், அதற்குள்ளாகவே உணவை வேகமாகச் சாப்பிட்டு முடிப்பதால், உடல் தேவைக்கும் அதிகமான கலோரிகளை நாம் உட்கொண்டு விடுகிறோம். இதன் விளைவாகக் காற்றையும் சேர்த்து விழுங்குவதால் அடிவயிறு வீக்கம், நெஞ்சு எரிச்சல் போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன. மாறாக, நிதானமாக மென்று உண்ணும் பழக்கம் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு திடீரென அதிகரிப்பதையும் தடுக்கிறது.
உணவு உண்பது என்பது வெறும் பசியைப் போக்குவது மட்டுமல்ல, அது ஒரு சமூகப் பழக்கமாகும். சாப்பிடும்போது கைபேசியை தூரத்தில் வைத்துவிட்டு, உணவின் சுவை மற்றும் மணத்தை அனுபவித்து உண்ண வேண்டும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உரையாடியபடி மகிழ்வோடு உண்ணும்போது, இயல்பாகவே உண்ணும் வேகம் குறையும். அதீதமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்து, நார்ச் சத்து மிகுந்த பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களைச் சேர்த்துக் கொள்வது சிறந்தது. “உணவை அருந்துங்கள்; நீரைப் பருகுங்கள்” என்ற பழமொழிக்கு ஏற்ப, உணவை கூழ் போல மென்று உட்செலுத்துவதே நீண்ட ஆயுளுக்கான ரகசியமாகும்



