தெலங்கானா மாநிலம் நாகர் கர்நூல் மாவட்டத்தில் உள்ள கல்வகுர்த்தி பகுதியில், 60 வயதான மல்லிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரின் இளைய மகளை, அதே பகுதியைச் சேர்ந்த நரசிம்மா (40) என்பவர் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கூலி வேலை செய்து வந்த நரசிம்மா, நாளடைவில் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளார்.
போதையில் மனைவியை சித்திரவதை செய்ததால், பொறுக்க முடியாமல் அவரது மனைவி தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்குச் சென்று தங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நரசிம்மா, அடிக்கடி மாமியார் வீட்டிற்குச் சென்று தகராறு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி, மல்லிகாவின் உறவினர் வீட்டுத் திருமணத்திற்காக அவரது மகளும் குழந்தைகளும் சென்றுவிட்டனர். வீட்டில் மல்லிகா மட்டும் தனியாக இருப்பதை அறிந்த நரசிம்மா, அன்று மாலை போதையில் அங்கு வந்துள்ளார். அப்போது குளித்துக் கொண்டிருந்த மல்லிகாவை வழிமறித்து, வலுக்கட்டாயமாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். வயதானவர் என்றும் பாராமல், அவர் கதறியும் கேட்காமல் வன்கொடுமை செய்த நரசிம்மா, பின்னர் அவரைத் தாக்கி கொடூரமாக கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர், வீடு திரும்பிய மகள், தனது தாய் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கல்வகுர்த்தி போலீசார், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் நரசிம்மா மீது சந்தேகம் வலுக்கவே, தலைமறைவாக இருந்த அவரைப் பிடித்துப் போலீசார் விசாரித்தனர். அப்போது, மதுபோதையில் மாமியாரை கற்பழித்துக் கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார். தற்போது கைது செய்யப்பட்டுள்ள நரசிம்மா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.



