தமிழக அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு பின்னடைவை தரும் செய்திகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தலைமை மீதான அதிருப்தியில் மாற்றுப் பாதையைத் தேடிச் செல்வது எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்குச் சென்ற அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், தற்போது முன்னாள் அமைச்சர் நிலோஃபர் கபில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
வாணியம்பாடி தொகுதியின் முக்கிய முகமாகவும், 2016-ல் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் இருந்த நிலோஃபர் கபில், கடந்த சில காலமாகவே கட்சித் தலைமையுடன் சுமூகமான உறவில் இல்லை என்று கூறப்படுகிறது. கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஓரங்கட்டப்படுவதாக உணர்ந்த அவர், எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
அந்த கடிதத்தில், “அதிமுகவிலிருந்து விலக முடிவெடுத்துள்ளேன்; கட்சியில் மேற்கொண்டு தொடர முடியாத சூழல் நிலவுகிறது” என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், அதிமுகவில் இருந்து விலகிய சில மணி நேரங்களில் திமுகவில் இணைந்து கொண்டார். ஜோலார்பேட்டையில் நடைபெற்ற திமுகவின் பிரம்மாண்டமான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் முறைப்படி தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.
கடந்த சில மாதங்களாகவே அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிலர் திமுகவுக்கும், பிற கட்சிகளுக்கும் இடம் மாறுவது தொடர்கதையாகி வருகிறது. “தலைமை மீதுள்ள அதிருப்தியா? அல்லது தேர்தல் வெற்றிக்கான வாய்ப்புகள் குறித்த சந்தேகமா?” என்ற விவாதம் ஒருபுறம் இருக்க, வலுவான ஒரு அணியை கட்டமைக்க வேண்டிய நேரத்தில் நிகழும் இத்தகைய வெளியேற்றங்கள் அதிமுக தலைமையை தற்காப்பு நிலைக்குத் தள்ளியுள்ளன.
Read More : சிவனின் தரிசனம் உங்களுக்கு கிடைக்க வேண்டுமா..? மகா சிவராத்திரிக்கு விரதம் இருக்கும் முறை..!!



