தமிழக மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ஒரே தவணையாக ரூ.5,000 வழங்கி இல்லத்தரசிகளை வியப்பில் ஆழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்ததாக தனது தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமான ஒன்றான ‘நகைக் கடன் தள்ளுபடி’ கோப்பை கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. ரூ.5,000 வரவு வைக்கப்பட்ட உற்சாகத்தில் இருக்கும் பொதுமக்கள் மத்தியில், கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்துள்ள நகைகள் எப்போது வீடு திரும்பும் என்ற எதிர்பார்ப்பு தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
மக்களின் இந்த நீண்டகால எதிர்பார்ப்பை ஈடுகட்டும் வகையில், தமிழக அரசு திரைமறைவில் மிகவேகமாகப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள நகைக் கடன்கள், தகுதியான பயனாளிகளின் பட்டியல் மற்றும் அதற்கான நிதி தேவை குறித்த விரிவான தரவுகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கூட்டுறவுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
தமிழகத்தில் தேர்தல் தேதி பிப்ரவரி 26ஆம் தேதி வாக்கில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பாகவே இந்தத் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோடைக்கால சிறப்பு நிதி மூலம் பெண்களின் ஆதரவை திரட்டியுள்ள திமுக அரசு, நகைக் கடன் தள்ளுபடி மூலம் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வாக்குகளை முழுமையாகத் தக்கவைக்க இந்த மெகா வியூகத்தை வகுத்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார சிக்கல்களால் தவித்து வரும் சாமானிய மக்கள், இந்த நகைக் கடன் தள்ளுபடி தங்களுக்குப் பெரும் நிம்மதியை தரும் என நம்புகின்றனர். ஏற்கனவே வழங்கப்பட்ட ரூ.5,000 உரிமைத் தொகை அரசு மீதான நம்பகத்தன்மையை அதிகரித்துள்ள சூழலில், பிப்ரவரி இறுதிக்குள் வெளியாக வாய்ப்புள்ள இந்த நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு, ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



