தமிழக அரசியல் களத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி, முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான பின்னடைவுகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் ஓபிஎஸ்-க்கு இருந்த செல்வாக்கு தற்போது மெல்ல மெல்ல சரிந்து வருவதன் அடையாளமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் அந்த அணிக்கு ஒரு பலத்த அடி விழுந்துள்ளது.
ஓபிஎஸ் அணியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த கருப்பூர் சீனி தலைமையில், அக்கட்சியின் ஒன்றிய மற்றும் நகர செயலாளர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள், விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
நீண்ட காலமாக ஓபிஎஸ் பக்கம் நின்ற விசுவாசமான நிர்வாகிகள், தற்போது தொகுதி வாரியாக அணி மாறி வருவது தூத்துக்குடி மாவட்டத்தில் அந்த அணியின் அடித்தளத்தையே ஆட்டங்காண செய்துள்ளது. மாவட்ட அளவிலான இரண்டாம் கட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக வெளியேறுவது, அந்தப் பகுதியில் ஓபிஎஸ் அணியின் பலத்தை வெகுவாகக் குறைத்துள்ளது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய தளபதிகள் அதிமுக, திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என வெவ்வேறு திசைகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த திடீர் இடப்பெயர்வு ஓபிஎஸ் தரப்பிற்குப் பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
Read More : மதுப்பிரியர்கள் ஷாக்..!! தமிழ்நாடு முழுவதும் பிப்.17ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் காலவரையின்றி மூடல்..!!



