மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில், திருமணமான நபர் ஒருவர் தனது கள்ளக்காதலியைக் கொலை செய்து, சடலத்தை இரும்புப் பெட்டியில் அடைத்து செப்டிக் டேங்கிற்குள் வீசிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
போபாலின் நிஷாத்புரா பகுதியைச் சேர்ந்த சமீர் என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மகாராஷ்டிராவின் கோந்தியா மாவட்டத்தைச் சேர்ந்த சியா என்ற இளம்பெண்ணுடன் சமீருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சமீரின் குடும்பப் பின்னணியை அறியாத சியா, அவரை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். தனது பெற்றோரின் கடும் எதிர்ப்பையும் மீறி, சுமார் 6 மாதங்களுக்கு முன்பு போபாலில் உள்ள சமீரின் வீட்டிற்கே நேரடியாக சென்றுள்ளார் சியா. அங்கு சென்ற பிறகுதான் சமீருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பது அவருக்குத் தெரியவந்தது. இருப்பினும், அங்கேயே தங்கி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு சியா பிடிவாதம் பிடித்ததால், ஒரே வீட்டில் இரு பெண்களுடனும் வசிக்க வேண்டிய கட்டாயம் சமீருக்கு ஏற்பட்டது.
ஒரே வீட்டில் கணவனின் காதலியுடன் வாழ்வது சமீரின் மனைவிக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதனால் இரு பெண்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் வெடித்தன. அக்கம் பக்கத்தினரின் சண்டைகளும் எல்லை மீறவே, சமீரின் மனைவி தனது குழந்தைகளுடன் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். மனைவி பிரிந்து சென்றதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சியா, தன்னை உடனடியாக திருமணம் செய்துகொள்ளுமாறு சமீருக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.
இதற்கு சமீர் மறுப்பு தெரிவிக்கவே, “தன்னை விட்டு விலக வேண்டும் என்றால் 5 லட்சம் ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும்” என சியா பேரம் பேசியதாக கூறப்படுகிறது. பணப் பேரத்தால் ஆத்திரமடைந்த சமீர், வாக்குவாதத்தின் உச்சத்தில் சியாவின் கழுத்தை நெரித்துக் கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர், ஆதாரங்களை மறைக்க தனது குடும்பத்தினரின் உதவியுடன் சியாவின் உடலை ஒரு பெரிய இரும்புப் பெட்டிக்குள் திணித்து, வீட்டின் அருகே இருந்த செப்டிக் டேங்கிற்குள் வீசியுள்ளார். சில நாட்களுக்குப் பிறகு அந்தப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், செப்டிக் டேங்கிலிருந்து வீசிய சகிக்க முடியாத துர்நாற்றத்தை கவனித்து ஊர் மக்களிடம் தெரிவித்துள்ளனர்.
பின்னர், தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் செப்டிக் டேங்கிற்குள் இருந்த இரும்புப் பெட்டியை மீட்டனர். பெட்டியைத் திறந்தபோது, உள்ளே அழுகிய நிலையில் சியாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சியாவின் கையில் இருந்த டாட்டூவை (Tattoo) அடையாளமாக வைத்துப் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர். தலைமறைவாக இருந்த சமீரை தற்பொழுது போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



