கடந்த 25 ஆண்டுகால நிதிச் சந்தையில் பாதுகாப்பான முதலீட்டு அரணாக திகழும் தங்கம், 2025-இன் தொடக்கத்திலிருந்து சுமார் 90% விலை உயர்வை சந்தித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் எதிர்பாராத திருப்பமாக, 10 கிராம் தங்கத்தின் விலை ஒரே நாளில் சுமார் ரூ. 24,500 (13.5%) சரிந்து ரூ. 1,56,200 என்ற நிலைக்கு கீழ் இறங்கியது. இந்தச் சரிவு வாரத்தின் முதல் நாளான இன்றும் (பிப்ரவரி 16) தொடர்ந்து, MCX சந்தையில் 10 கிராம் தங்கம் ரூ. 1,54,937 என்ற விலையில் வர்த்தகமானது முதலீட்டாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அதிரடி மாற்றங்கள் குறித்து அமெரிக்கன் கல்லூரியின் பொருளாதார துறைப் பேராசிரியர் முத்துராஜ் பகிரும் தகவல்கள் ஆச்சரியமூட்டுபவையாக உள்ளன. “தங்கம் என்பது இந்தியர்களுக்கு வெறும் முதலீடு மட்டுமல்ல; அது கலாச்சாரம் மற்றும் குடும்ப மரபுகளுடன் பின்னிப் பிணைந்த ஒரு உணர்வு” என்கிறார் அவர். குறிப்பாக, இந்தியாவின் ஒட்டுமொத்த நகை வளத்தில் 45% தமிழ்நாட்டுப் பெண்களிடமே இருப்பதாகக் குறிப்பிடும் அவர், தமிழக இல்லங்களில் மட்டும் சுமார் 6,720 டன் தங்கம் முடங்கிக் கிடப்பதாகத் தெரிவிக்கிறார். இது உலகின் வல்லரசான அமெரிக்காவின் தேசிய தங்கக் கையிருப்பை விடவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார நிச்சயமற்றத் தன்மை மற்றும் புவிசார் அரசியல் சூழல்கள் தங்கத்தின் தேவையை எப்போதும் உச்சத்திலேயே வைத்திருக்கின்றன. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால், பணத்தின் வாங்கும் திறன் குறையும் என்ற அச்சத்தில் மக்கள் பாதுகாப்பான புகலிடமாக தங்கத்தையே நாடுகின்றனர். மறுபுறம், எளிதாகத் தங்கம் வெட்டியெடுக்கக்கூடிய சுரங்கங்கள் குறைந்து வருவதும், அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளில் தங்கத்தின் வரத்து (Supply) பெருமளவு குறையும் என்ற கணிப்புகளும் அதன் மதிப்பை மேலும் உயர்த்துகின்றன. தற்காலிக விலை வீழ்ச்சிகள் ஏற்பட்டாலும், நீண்ட கால அடிப்படையில் தங்கம் ஒரு அசைக்க முடியாத நிதிச் சக்தியாகவே தொடரும் எனப் பேராசிரியர் முத்துராஜ் சுட்டிக்காட்டுகிறார்.



