தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.. அப்போது பேசிய அவர் ” ஐந்தாண்டுகளில் குறுவை பருவத்தில் 186 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டு, ரூ.2,118 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. 5 ஆண்டுகாலத்தில் 5.70 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,894 கோடி ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 1600 கோடி மதிப்பில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
புதிதாக 2 லட்சம் விவசாயிகளின் நிலங்களுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.80 கோடி மதிப்பிலான பனைப் பொருட்களை உற்பத்தி செய்து விற்அனை செய்யப்பட்டது. பனை மேம்பாட்டு இயக்கம் மூலம் 5 ஆண்டுகளில் 68 லட்சம் பனை விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
பனை ஓலை பொருட்கள் தயாரிக்கும் பயிற்ச்சியின் மூலம் 1.45 லட்சம் பேருக்கு பயனடைந்துள்ளனர். சூரிய சக்தி பம்பு செட் போன்ற உயர்மதிப்பு திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர் பழங்குடியினர் பிரிவு, சிறு குறு விவசாயிகளுக்கு 70% மானியம் வழங்கப்படுகிறது.
5 ஆண்டுகளில் இயற்கை பேரிடரால் சேதமடைந்த பயிர்களுக்கு ரூ.2,045 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. நுண்ணீர் பாசன திட்டத்தை பயன்படுத்தும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. 150 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மின்னணு சந்தை உடன் இணைக்கப்பட்டதால் 18 லட்சம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் அதிகபட்சமாக 137 லட்சம் மெட்ரிக் டன் பொருட்கள், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பரிவர்த்தனை செய்யப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளில் புவிசார் குறியீட்டுக்காக 41 விளைப் பொருட்கள் விண்ணப்பிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 9 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படுள்ளது. 46 கோடியில் உழவர் சந்தைகள் இதுவரை புதுப்பிக்கப்பட்டுள்ளன. 5 ஆண்டுகளில் குளிர் பதனிடும் கிடங்குகளுக்காக 27 கோடி செலவிடப்பட்டுள்ளது. வேளாண் விஞ்ஞானிகள் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ரூ.134 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் 101 புதிய பயிர் ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



