தமிழக சட்டமன்றத்தில் இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் குறித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் அருண்குமார் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். இந்த பட்ஜெட் என்பது தமிழக மக்களின் தேவைகளை நிறைவு செய்வதைவிட, ஆளுங்கட்சியின் தற்பெருமைகளை பாடும் அறிக்கையாகவே உள்ளதாக அவர் சாடினார். திமுக அரசின் இந்த இறுதி பட்ஜெட்டில் முதலமைச்சரை பாராட்டு மழையில் நனைய வைத்ததை தவிர, உருப்படியான திட்டங்கள் எதுவும் இல்லை.
பொருளாதார ரீதியாக தமிழகம் 11.19% வளர்ச்சியை எட்டி முதலிடம் வகிப்பதாக அரசு மார்தட்டிக்கொள்வதை விமர்சித்த அருண்குமார், மறுபுறம் தமிழகத்தின் கடன் சுமை மார்ச் 31, 2027க்குள் 10.62 லட்சம் கோடியாக உயரும் என்ற தகவலையும் சுட்டிக்காட்டினார். “பொருளாதாரத்தில் முதலிடம் வகிக்கும் ஒரு மாநிலம், எதற்காக இத்தனை லட்சம் கோடிகளை மீண்டும் மீண்டும் கடன் வாங்க வேண்டும்?” என்ற கேள்வியை அவர் முன்வைத்தார். பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்யாத சூழலில், வாங்கிக் குவிக்கப்பட்டுள்ள இந்தக் கடன் சுமை எதிர்காலத்தில் தமிழகத்தைப் பெரும் பொருளாதாரப் நெருக்கடியில் தள்ளும் எனவும் அவர் எச்சரித்தார்.
மேலும், கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் காற்றிலே பறக்கவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். உரிமைக்காக பணியாளர்களை தெருவில் இறங்கிப் போராட வைத்துள்ள அரசு, மாநிலமே சுபிட்சமாக இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை பட்ஜெட்டில் உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்த பட்ஜெட்டிற்கு ‘ஜீரோ மார்க்’ மட்டுமே கொடுக்க முடியும் என்றார். “இந்த பட்ஜெட்டில் இருக்கும் ஒரே ஆறுதல், இது திமுக அரசின் கடைசி பட்ஜெட் என்பதுதான்” என்று குறிப்பிட்ட அவர், 2026-ல் அமையவுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு மக்களின் நலன் சார்ந்த உண்மையான பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் என நம்பிக்கை தெரிவித்தார்.



