கர்ப்ப காலத்தில் ஏற்படும் தலைவலி, காய்ச்சல் அல்லது உடல் வலிகளுக்குப் பெரும்பாலான பெண்கள் பாதுகாப்பான மருந்தாகக் கருதி பாரசிட்டமால் (அசிடமினோஃபென்) மாத்திரைகளை உட்கொள்வது வழக்கம். ஆனால், இது குழந்தையின் நரம்பியல் வளர்ச்சியில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்ற ஒரு புதிய ஆய்வறிக்கை மருத்துவ உலகில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அமெரிக்காவின் மவுண்ட் சினாய் (Mount Sinai) மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட 46 வெவ்வேறு ஆய்வுகளைத் திரட்டி இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆய்வின்படி, தாயால் உட்கொள்ளப்படும் பாரசிட்டமால் மருந்தானது நஞ்சுக் கொடி (Placenta) வழியாகக் கருவிலுள்ள குழந்தையைச் சென்றடைகிறது. இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன் சமநிலையைச் சீர்குலைப்பதுடன், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைத் தூண்டி மரபணு நடத்தையிலும் (Epigenetic changes) மாற்றங்களை ஏற்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு ஆட்டிசம் (Autism) மற்றும் கவனக்குறைவு காரணமாக ஏற்படும் ஹைபராக்டிவிட்டி (ADHD) போன்ற நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்குகின்றனர்.
இது குறித்துப் பேசிய உதவிப் பேராசிரியர் டிடியர் பிராடா, “பாரசிட்டமால் பயன்பாட்டிற்கும் இத்தகைய குறைபாடுகளுக்கும் இடையே நேரடியான காரண-காரியத் தொடர்பு இன்னும் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், இதற்கான சான்றுகள் மிகவும் வலுவாக உள்ளன” என எச்சரித்துள்ளார். உலகளவில் ஆட்டிசம் மற்றும் ADHD பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில், இந்த ஆய்வு முடிவுகள் பொது சுகாதாரக் கொள்கைகளில் பெரும் மாற்றத்தைக் கோருகின்றன.
இருப்பினும், கர்ப்பிணிகள் இந்தத் தகவலைக் கேட்டு பீதியடைய தேவையில்லை என்றும், காய்ச்சல் போன்ற அவசர காலங்களில் மருத்துவரின் முறையான ஆலோசனையின்றி மருந்துகளை சுயமாக எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையெனில், மிகக் குறைந்த அளவில், குறிப்பிட்ட கால இடைவெளியில் மட்டுமே பாரசிட்டமாலைப் பயன்படுத்த வேண்டும் என்பதே தற்போதைய மருத்துவப் பரிந்துரையாக உள்ளது.
Read More : ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவரா நீங்கள்..? ஆய்வு முடிவில் வெளியான சூப்பர் தகவல்..!!



