தெலங்கானா மாநிலம் கரீம்நகரில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த கத்தி சுரேஷ் என்பவர், மதுப் பழக்கத்திற்கு அடிமையாகித் தனது மனைவி மௌனிகாவை தொடர்ந்து சித்திரவதை செய்து வந்துள்ளார். குடும்பப் பொறுப்பின்றி மனைவியின் வருமானத்தை சுரண்டிய சுரேஷின் போக்கு, மௌனிகாவை தவறான பாதையில் தள்ளியுள்ளது. அஜய் என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதல், இறுதியில் தனது கணவனையே காவு வாங்கும் அளவிற்கு ஒரு பயங்கர திட்டமாக உருவெடுத்தது.
சுரேஷின் மரணத்தை விபத்து அல்லது இயற்கை மரணமாக சித்தரிக்க மௌனிகா தீட்டிய திட்டங்கள் ஒவ்வொன்றும் நடுக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு மருத்துவ ஏஜென்சி உரிமையாளரின் ஆலோசனையின் பேரில், சுரேஷுக்கு கொடுத்த மட்டன் குழம்பில் 15 வயாகரா மாத்திரைகளை கலந்து தந்துள்ளார் மௌனிகா. ஆனால், அதன் மணம் மாறுபட்டதால் சுரேஷ் அதனை சாப்பிட மறுத்துவிட்டார்.
முதல் முயற்சி தோல்வியடைந்த நிலையில், கடந்த செப்டம்பர் 17, 2025 அன்று சுரேஷின் மதுவில் ரத்த அழுத்த (BP) மாத்திரைகளையும், தூக்க மாத்திரைகளையும் கலந்து கொடுத்து அவரை மயக்கமடைய செய்துள்ளனர். பின்னர் தனது கள்ளக்காதலன் மற்றும் கூட்டாளிகளுடன் இணைந்து, சுரேஷின் கழுத்தை இறுக்கிக் கொன்று, உடலை ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடியுள்ளார் மௌனிகா.
கொலைக்கு தற்கொலை சாயம் பூசிய மௌனிகா, உறவினர்களிடம் சுரேஷ் மாரடைப்பால் இறந்ததாக கூறி நம்ப வைத்தார். ஆனால், சுரேஷின் பெயரில் இருந்த ஆயுள் காப்பீட்டுத் தொகையை பெற வேண்டும் என்றால் போலீசில் புகார் அளிக்க வேண்டும் என உறவினர்கள் வற்புறுத்தவே, வேறு வழியின்றி மௌனிகா காவல் நிலையம் சென்றுள்ளார். அதுவே அவருக்குப் பெரும் வினையாக முடிந்தது.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சுரேஷின் கழுத்தில் இருந்த காயங்கள் தற்கொலை அல்ல என்பதை உறுதிப்படுத்தின. காவல்துறையினரின் கிடுக்குப்பிடி விசாரணையில் நிலைகுலைந்த மௌனிகா, கொலையை ஒப்புக்கொண்டார். இந்தச் சதியில் ஈடுபட்ட மௌனிகா, அஜய் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த 4 பேர் என மொத்தம் 6 பேரை கரீம்நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.



