பொதுவாகவே வெள்ளிக்கிழமை என்றாலே அது மகாலட்சுமிக்கு உகந்த நாள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தை திங்கள், ஆடி மாதம் என விசேஷ வெள்ளிக்கிழமைகளில் நாம் ஆராதனைகள் செய்தாலும், சிலருக்குப் பணப் பிரச்சனைகள் தீராத சவாலாகவே இருந்து வருகிறது. “பணம் கைக்கு வருவது போல் இருக்கிறது, ஆனால் கடைசி நேரத்தில் தட்டிப் போகிறது” என்று வருந்துபவர்கள், மனம் தளர வேண்டிய அவசியமில்லை. மகாலட்சுமி வழிபாட்டைத் தொடர்ச்சியாக மேற்கொள்வதே இதற்குச் சிறந்த தீர்வாகும். அந்த வகையில், இன்று வந்துள்ள வெள்ளிக்கிழமை ஒரு மிகச்சிறந்த ஆன்மீக யோகத்தைக் கொண்டுள்ளது.
இன்றைய வெள்ளிக்கிழமை, பூரம் நட்சத்திரத்துடன் இணைந்து வருவது கூடுதல் சிறப்பு. பூரம் நட்சத்திரம் என்பது வைணவக் குலவிளக்காம் ஆண்டாள் நாச்சியார் அவதரித்த நட்சத்திரமாகும். மகாலட்சுமியின் அம்சமான ஆண்டாளின் நட்சத்திரமும், சுக்கிர வாரமான வெள்ளிக்கிழமையும் கைகோர்த்துள்ள இந்த நன்னாளில், தாயாரை வணங்குவது கோடி நன்மைகளை வாரி வழங்கும். இன்று மாலை உங்கள் வீட்டுப் பூஜை அறையில் வழக்கம் போல தீபமேற்றி, மல்லிகை அல்லது தாமரை மலர்களால் மகாலட்சுமியை அலங்கரித்து வழிபாட்டைத் தொடங்கலாம்.
இன்றைய வழிபாட்டில் மிக முக்கியமான அம்சம் ‘லட்டு’ நெய்வேத்தியம். நெய் வாசம் கமழும் சுவையான லட்டுக்கு மகாலட்சுமி தாயார் மகிழ்ந்து அருள்புரிவார் என்பது ஐதீகம். லட்டு என்பது குரு பகவானின் அம்சம் கொண்ட இனிப்பாகக் கருதப்படுகிறது. “குரு பார்க்க கோடி நன்மை” என்பார்கள். எனவே, இன்று லட்டு வைத்து வழிபடுவதன் மூலம் மகாலட்சுமியின் அருளோடு, குரு பகவானின் யோகமும் உங்களுக்குக் கிடைக்கும். கடையிலிருந்து வாங்கிய லட்டு அல்லது வசதி இல்லாதவர்கள் வீட்டிலேயே காய்ச்சிய பசும்பால் கொண்டு செய்த பால் பாயாசத்தையும் நெய்வேத்தியமாகப் படைக்கலாம்.
உங்கள் வீட்டு அருகில் பெருமாள் கோவில் இருந்தால், அங்குள்ள தாயார் சந்நிதிக்குச் சென்று நெல்லிக்காய் மாலை அணிவித்து வழிபாடு செய்வது இரட்டிப்பு பலனைத் தரும். முக்கியமாக, நீங்கள் நெய்வேத்தியம் செய்த லட்டு அல்லது பாயாசத்தை மற்றவர்களுக்குத் தானமாக வழங்க வேண்டும். குறிப்பாகச் சிறு குழந்தைகளுக்கு இந்த இனிப்புகளை வழங்கும்போது, அவர்களின் மகிழ்ச்சி உங்கள் வாழ்வின் தடைகளைத் தகர்க்கும். கடன் பிரச்சனையால் தவிப்பவர்கள், வர வேண்டிய பணம் வராமல் தவிப்பவர்கள் இந்த எளிய பரிகாரத்தை இன்று நம்பிக்கையுடன் செய்யலாம்.
பணம் வீண் விரயம் ஆவதை தவிர்க்கவும், சரியான நேரத்தில் பணத்தேவைகள் பூர்த்தியாகவும் இன்றைய பூரம் நட்சத்திர வெள்ளிக்கிழமை வழிபாடு ஒரு நல்வாய்ப்பாகும். வீட்டில் விளக்கேற்றி, மனதாரத் தாயாரை வேண்டி, உங்களால் முடிந்த இனிப்பை தானமாக வழங்குங்கள். இந்தச் சிறு முயற்சி உங்கள் இல்லத்தில் நேர்மறை ஆற்றலை ஈர்த்து, பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்யும். இன்றைய நாளைத் தவறவிடாமல் மகாலட்சுமி வழிபாட்டை மேற்கொண்டு, ஐஸ்வர்யங்கள் அனைத்தையும் பெற்றிடுங்கள்.



