மதுரை மாநகரின் அரசியல் களம், கடந்த சில நாட்களாக காணாத அளவிலான பரபரப்புகளை சந்தித்து வருகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் நிழலாகவும், அவரது தீவிர விசுவாசிகளாகவும் அறியப்பட்ட முக்கிய புள்ளிகள் அடுத்தடுத்து ஆளுங்கட்சியான திமுகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு அழகிரியின் வலதுகரமாகப் பார்க்கப்பட்ட மதுரை மன்னன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். அந்த அதிர்ச்சி விலகுவதற்குள்ளேயே, தற்போது திமுகவின் தலைமைச் செயற்குழு உறுப்பினராக இருந்த எஸ்.ஆர். கோபியும் அதே பாதையைத் தேர்ந்தெடுத்து அதிமுகவுக்கு மாறியுள்ளார்.
மதுரை அரசியலில் அடிமட்ட தொண்டர்களுடன் நேரடித் தொடர்பில் உள்ள இந்த நிர்வாகிகள், கடந்த பல தசாப்தங்களாக திமுகவின் வெற்றிகளில் முக்கியப் பங்கு வகித்தவர்கள். குறிப்பாக, அழகிரியின் ஆதரவாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட தொடங்கியிருப்பது, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மதுரையில் திமுகவின் கோட்டையைத் தகர்க்கும் ஒரு ஆரம்பக்கட்ட முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. கட்சியின் கொள்கைகளை தாண்டி, தனிப்பட்ட செல்வாக்கு கொண்ட இத்தகைய நிர்வாகிகள் வெளியேறுவது, மதுரையில் திமுகவின் தேர்தல் பணிகளில் பெரும் தொய்வை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தென் மாவட்டங்களில் தனது பிடியை உறுதிப்படுத்த திட்டமிட்டு மேற்கொண்டு வரும் ‘ஆபரேஷன் மதுரை’ தற்போது வேகம் எடுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடைபெற்ற இந்த இணைப்புகள், தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுக தொண்டர்களுக்குப் புதிய உற்சாகத்தை தந்துள்ளன.
மு.க. அழகிரி அரசியலில் மௌனம் காத்து வந்தாலும், அவரது ஆதரவாளர்கள் திடீரென அதிமுகவை நோக்கி நகர்வது தற்செயலான நிகழ்வாகத் தெரியவில்லை. இது மதுரையில் திமுகவின் உட்கட்சிப் பூசலையும், கள நிலவரத்தில் நிலவும் அதிருப்தியையும் அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.
Read More : இனி நகைக்கடன் தள்ளுபடி கிடையாது..? கூட்டுறவு வங்கிகள் திவாலாகும் அபாயம்..? வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்..!!



