காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த புதுநல்லூர் பகுதியில் கார்த்தி – பிரியங்கா தம்பதியினர், தங்களது 7 மற்றும் 5 வயதுடைய இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தனர். கார்த்தி அருகிலுள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த நிலையில், இல்லத்தரசியாக இருந்த பிரியங்காவுக்கு, அதே பகுதியை சேர்ந்த உறவினரான முருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முருகனுக்கும் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், கார்த்தி வேலைக்குச் செல்லும் நேரங்களில் முருகனும் பிரியங்காவும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
முருகனின் மனைவி ஜோதிக்கு தனது கணவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்படவே, அவர் ரகசியமாக கண்காணிக்க தொடங்கினார். அப்போது பிரியங்காவுடன் தனது கணவர் தகாத உறவில் இருப்பதை உறுதி செய்த ஜோதி, அதிர்ச்சியடைந்தார். இந்த விவகாரத்தைப் பிரியங்காவின் கணவர் கார்த்தியின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, கார்த்தியும் ஜோதியும் இணைந்து அந்த இருவரையும் கண்டித்து, இந்த உறவைக் கைவிடுமாறு எச்சரித்துள்ளனர்.
பின்னர், பிரியங்கா ஜோதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த ஜோதி, அனைவர் முன்னிலையிலும், “இன்னொருத்தன் புருஷனுடன் இப்படித் தகாத உறவில் இருக்க வெட்கமாக இல்லையா?” என்று பிரியங்காவை சாடியுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டும், ரகசிய உறவும் ஊர் அறிய வெளிச்சத்திற்கு வந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான பிரியங்கா, தற்கொலை செய்து கொள்ளும் விபரீத முடிவை எடுத்தார்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரியங்கா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்த கார்த்தி, சோமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், பிரியங்காவின் உடலைக் கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More : இனி நகைக்கடன் தள்ளுபடி கிடையாது..? கூட்டுறவு வங்கிகள் திவாலாகும் அபாயம்..? வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்..!!



