தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், கரூர் மாவட்ட அரசியலில் அதிமுக தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில், மாற்றுக்கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வுகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.
கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த இணைப்பு நிகழ்வில், ஆளுங்கட்சியான திமுக மற்றும் தேசிய கட்சியான காங்கிரஸ் ஆகியவற்றிலிருந்து விலகிய நிர்வாகிகள் பலரும் அதிமுகவின் கொள்கைகளை ஏற்று இணைந்தனர். இதில் குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் போன்ற வளர்ந்து வரும் புதிய கட்சிகளில் இருந்தும் நிர்வாகிகள் விலகி அதிமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.



