ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் மங்களகிரியில், காதல் மற்றும் குடும்ப தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் தனது மனைவியால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மங்களகிரியை சேர்ந்த கிராந்தி (25) என்ற பெண்ணின் வீட்டில், குளிர்சாதனப் பெட்டி (AC) பழுதைச் சரி செய்ய வந்த ஷேக் அகமது (27) என்பவருடன் ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் தீவிர காதலாக மாறியுள்ளது. இந்த காதலுக்காக தனது முதல் கணவரை சட்டப்படி விவாகரத்து செய்த கிராந்தி, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஷேக் அகமதுவை முறைப்படி இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
மத வேறுபாடுகள் மற்றும் கிராந்தியின் முந்தைய திருமண வாழ்க்கையால், ஷேக் அகமதுவின் குடும்பத்தினர் இவர்களது திருமணத்தை ஏற்கவில்லை. உறவினர்களின் எதிர்ப்பையும் மீறி, மங்களகிரி அரசு குடியிருப்பில் இந்தத் தம்பதியினர் குடியேறினர். ஆனால், இவர்களது மகிழ்ச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. திருமணமான சில வாரங்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தலைதூக்கின. சமூக அழுத்தங்கள் மற்றும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, அந்த வீட்டில் சண்டைகள் அன்றாட நிகழ்வாக மாறியதாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து வீடு திரும்பிய ஷேக் அகமதுவுக்கும் கிராந்திக்கும் இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் வெடித்தது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியாத கிராந்தி, சமையலறை கத்தியை எடுத்து ஷேக் அகமதுவின் வயிற்றில் சரமாரியாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்குப் போராடிய அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு விஜயவாடா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஷேக் அகமது பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொலை சம்பவம் குறித்துச் சமூக வலைதளங்களில், “தொலைக்காட்சி சத்தத்தை குறைக்கச் சொன்னதால் கணவன் கொல்லப்பட்டார்” என்ற தவறான தகவல் காட்டுத்தீயாகப் பரவியது. இதனை வன்மையாக மறுத்துள்ள மங்களகிரி போலீஸார், ஷேக் அகமது வசித்து வந்த வீட்டில் தொலைக்காட்சியே இல்லை என்றும், இக்கொலை முழுக்க முழுக்க தனிப்பட்ட குடும்பத் தகராறால் நிகழ்ந்தது என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர். தற்போது உயிரிழந்த இளைஞரின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், கிராந்தி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.



