தமிழகத்தின் ஆன்மிக வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த அய்யா வைகுண்ட சாமியின் அவதாரத் திருநாள், ஆண்டுதோறும் கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு தலைமைப் பதியில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு அய்யா வைகுண்ட சாமியின் 194-வது அவதாரத் திருவிழா வருவதையொட்டி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமிதோப்பு நோக்கிப் பயணம் மேற்கொள்வார்கள்.
இதனை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காகவும், வழிபாட்டுச் சிறப்பினைப் போற்றும் விதமாகவும் நெல்லை மாவட்டத்திற்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வ உத்தரவை பிறப்பித்துள்ளார். ஒவ்வொரு ஊரிலும் உள்ள அய்யா வைகுண்ட சாமியின் பதிகள் மற்றும் திருத்தாங்கல்களில் அன்றைய தினம் சிறப்பு வாகன பவனி மற்றும் அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெறும்.
குமரி மாவட்டத்தைத் தொடர்ந்து, நெல்லை மாவட்டத்திலும் அய்யா வழி பக்தர்கள் அதிகளவில் வசிப்பதை கருத்தில் கொண்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 4-ம் தேதி (புதன்கிழமை) நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை பொருந்தும். இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில், மார்ச் 14-ம் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்திலுள்ள அனைத்து அலுவலகங்களும் முழு வேலை நாளாகச் செயல்படும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



