யுபிஐ வாயிலான ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என்பது நமது அன்றாடங்களை எளிமையாக்கி வருகிறது. எவரையும் நாடாது, வங்கி அல்லது ஏடிஎம் செல்லாது, பணத்தை பரிமாற்றவும், பொருட்களை ஆன்லைனில் வாங்கவும், இன்னபிற தேவைகளுக்காகவும் யுபிஐ பரிவர்த்தனை தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால் அவற்றினூடே மறைந்திருக்கும் ஆபத்துகளை சாமானியர்கள் அறிவதில்லை. மோசடி பேர்வழிகள் இந்த யுபிஐ பரிவர்த்தனையை பயன்படுத்தி எளிதில் பெரும் தொகைகளை அப்பாவிகளிடமிருந்து பறித்துவிடுகிறார்கள். எனவே, யு.பி.ஐ., மோசடி மேற்கொள்ளப்படும் வழிகளையும், இவற்றில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிகளையும் அறிவது அவசியமாக உள்ளது.
பயனாளிகளை ஏமாற்ற பலவித வழிகள் பின்பற்றப்பட்டாலும், ஏமாற்றுபவர்கள் அணுகுமுறையில் ஒருவித தொடர்பு இருப்பதை காணலாம். பெரும்பாலும், வங்கிகளில் இருந்து தகவல் வந்திருப்பதாக நம்ப வைத்து, அடிப்படை தகவல்களை பகிர வைத்து, பயனாளி கணக்கிற்குள் நுழைகின்றனர். பணம் அனுப்பும் போது அல்லது பெறும் போது பயனாளிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பணம்அனுப்பும் வசதி மோசடியாளர்களால் அதிகம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. ரகசிய எண்ணை யாருடனும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது முக்கியம். அடிக்கடி வங்கி கணக்கு இயக்கத்தை கண்காணிக்க வேண்டும்.
டிஜிட்டல் பண மோசடியில் இருந்து தற்காத்துக்கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தும் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். பணம் அனுப்பும் கோரிக்கை தொடர்பான எச்சரிக்கை, மோசடி அழைப்புகள் குறித்த கவனம், சந்தேகமான இணைப்பு களை கிளிக் செய்யாமல் இருப்பது முக்கியம். வங்கிகள் இது போன்ற தகவல்களை கோருவதில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும். மேலும், பொது இணையம் அல்லது பொது வை-பை கொண்டு வங்கி கணக்கை அணுகுவதை கைவிட வேண்டும். எச்சரிக்கையான அணுகுமுறை தற்காப்புக்கு உதவும் என்றாலும், எதிர்பாராதவிதமாக பாதிப்பு ஏற்பட்டால் உடனே வங்கியை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிப்பது அவசியம்.