இந்தியாவில் சுமார் 40 சதவீத மக்கள் கல்லீரல் தொடர்பான பாதிப்புகளுக்கு உள்ளாகி இருப்பதாக அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. நவீன கால வாழ்க்கைச் சூழலில் நாம் அன்றாடம் செய்யும் மூன்று மிகச் சாதாரணமான தவறுகளே இந்த உயிருக்கே ஆபத்தான பாதிப்பிற்கு மூலகாரணமாக அமைவதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, இரவு 9 மணிக்கு மேல் தாமதமாக உணவு உட்கொள்ளும் பழக்கம், உடலில் இன்சுலின் சுரப்பைப் பாதித்து கல்லீரலில் தேவையற்ற கொழுப்பைச் சேர்ப்பதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இரண்டாவதாக, காலை உணவில் புரதச்சத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல், அதிகப்படியான மாவுச்சத்து (Carbohydrates) கொண்ட உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்வது இரத்தத்தில் சர்க்கரை அளவை திடீரென உயர்த்தி, நாளடைவில் கல்லீரல் செயலிழப்பிற்கு வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது. அதேபோல், உணவு சாப்பிட்டு முடித்த கையோடு எவ்வித உடல் உழைப்பும் இன்றி உடனே அமர்வது அல்லது உறங்கச் செல்வது கல்லீரலுக்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த அபாயங்களில் இருந்து கல்லீரலைப் பாதுகாக்க மருத்துவ உலகம் சில எளிய தீர்வுகளை முன்வைக்கிறது. இரவு உணவைச் சீக்கிரமாகவே உண்டு முடிப்பதோடு, காலை உணவில் முட்டை அல்லது பயறு வகைகள் போன்ற புரதச்சத்து மிக்க உணவுகளைக் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, சாப்பிட்டு முடித்த பிறகு குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் மெதுவான நடைப்பயிற்சியை மேற்கொள்வது கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Read More : இதய நோயாளிகளே..!! லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை நல்லதல்ல..!! எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்..!!



