மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு ராமநாதபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம், தமிழக அரசியலில் மீண்டும் ஒரு புயலை கிளப்பியுள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு பொதுமேடையில் அதிரடி காட்டிய சசிகலா, அதிமுகவின் தற்போதைய தலைமை மற்றும் உட்கட்சிப் பூசல்கள் குறித்து பரபரப்பு கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
தனது உரையில், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிகாரத்தின் மீதான ஆசையில் தான் பொதுச்செயலாளர் பதவியை ஏற்கவில்லை என்றும், தொண்டர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே அந்தப் பொறுப்பைச் சுமந்ததாகவும் விளக்கமளித்தார். ஓபிஎஸ் அவர்களுக்கு ஏற்பட்ட நிர்வாக சிக்கல்கள் மற்றும் அரசியல் நெருக்கடிகள் காரணமாகவே, அன்று தான் முதல்வர் நாற்காலியில் அமர வேண்டிய சூழல் உருவானதாக அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்துப் பேசுகையில், எந்தக் கையை பிடித்து ஒருவரை முதல்வர் நாற்காலியில் அமர வைத்தேனோ, அவரே பின்னால் இருந்து முதுகில் குத்தி என்னைக் கட்சியை விட்டு நீக்கினார். தான் சிறையில் இருந்தபோது சந்தித்த நெருக்கடிகள், கணவர் நடராஜனின் உடல்நலக் குறைவின் போது பரோல் பெறுவதில் ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் என அனைத்திற்கும் ஈபிஎஸ் தரப்பே காரணம் என சாடினார். நல்லவர்கள் பெயரை நாவால் உச்சரிக்கலாம், ஆனால் இந்தப் பெயரைச் சொல்லக் கூட எனக்கு விருப்பமில்லை என வெறுப்பை வெளிப்படுத்தினார்.
தற்போது அதிமுக, பாஜக மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் பயணிக்கும் வேளையில், ஓபிஎஸ் மற்றும் சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் சேர்க்க எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக மறுத்து வருகிறார். இந்த இக்கட்டான சூழலில், தென் தமிழகத்தில் சசிகலா காட்டியுள்ள இந்த அதிரடி வேகம், வரும் தேர்தல்களில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ தலைமைக்கு சவாலாக அமையும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
Read More : முருகப்பெருமானின் 8ஆம் படை வீடு எங்கிருக்கு தெரியுமா..? இந்த கோயிலுக்கு போனாலே உங்கள் தலைவிதி மாறும்..!!



