தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் . இந்நிலையில் தனது அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டார் விஜய். மேலும் தனது அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் சூட்டினார்.
இந்நிலையில் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து ஆதரவாகவும் எதிராகவும் இரு வேறு கருத்துக்கள் ஊடகங்களில் வலம் வருகிறது. அந்த வகையில் விஜய்யின் அரசியல் வருகை பற்றி தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார் தமிழர் முன்னேற்ற படை கட்சியைச் சேர்ந்த வீரலட்சுமி. இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் கடந்த வருடம் விஜய் ரசிகையான சிறுமி ஐந்த இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தீக்குளிக்க முயன்ற அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது தனக்கு உதவி வேண்டி விஜய்யிடம் கோரிக்கை வைத்தார் . ஆனால் விஜய் அந்த சிறுமிக்கு உதவவில்லை. அவரது ரசிகர்கள் 50 ஆயிரம் ரூபாய் திரட்டி கொடுத்தனர் . அந்த சிறுமி பரிதாபமாக உயிர் இழந்தார்.
நான் அவரிடம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். நீங்கள் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று நினைத்தால் உங்கள் பணத்தில் ஏழை மக்களுக்கு வீடு கட்டிக் கொடுங்கள். நீங்கள் 47 வருடம் சினிமாவில் நன்றாக சம்பாதித்து விட்டு தற்போது உங்களது சொத்துக்களை காப்பதற்காக அரசியலுக்கு வந்திருக்கிறீர்கள். நீங்கள் நிச்சயமாக மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்திருந்தால் நான் உங்களுடன் கைகோர்ப்பேன் என தெரிவித்திருக்கிறார். இவரது பேட்டி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.