மறைந்த நல்லகண்ணுவின் உடலுக்கு முழு அரசு மரியாதை.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..! அமைதியாக வலம் வந்த அரசியல் எரிமலை என புகழஞ்சலி..!

nallakannu stalin

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.. முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததால் நல்லக்கண்ணு பிற்பகல் 1.55 மணியளவில் காலமானார்.. எளிமை, நேர்மையின் அடையாளமாகவும், வாழ்நாள் போராளியாகவும் தவிர்க்க முடியாத சகாப்தமாக இருந்த நல்லகண்ணுவின் மறைவு தமிழக அரசியலில் ஏற்பட்ட பேரிழப்பாகும்..


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமான பாலன் இல்லத்திற்கு நல்லகண்ணுவின் உடல் கொண்டு செல்லப்பட உள்ளது. நாளை மாலை 4 மணி வரை மக்களின் அஞ்சலிக்காக நல்லகண்ணு உடல் வைக்கப்பட்டிருக்கும்.. நாளை மாலை சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நல்லக்கண்ணு உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காக ஒப்படைக்கப்படுகிறது..

நல்லகண்ணு மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் நல்லக்கண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ எனக்கு ஒரு கண்ணில் சரிவரப் பார்வை இல்லை என்றாலும், அகத்தில் மற்றொரு கண் இருக்கிறது. அதுதான் நல்லகண்ணு” என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கண்ணாகப் போற்றப்பட்ட முதுபெரும் தலைவர் – தோழர் திரு. நல்லகண்ணு அய்யா அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி நம்மையெல்லாம் கடும் துயரத்திற்கு ஆளாக்கியுள்ளது. நம் சமகாலத்தில் வாழ்ந்த சமரசமற்ற போராளி; நாட்டின் விடுதலைக்காக, பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்காக தம் இனிய வாழ்வின் பெரும்பகுதியை ஈகம் செய்த தியாகப் பெருஞ்சீலர்! சிறை, சித்திரவதை, வலிகள் நிறைந்த வாழ்க்கை என்று எத்தனை இடர்கள் வந்தாலும் – “சுட்டுப் பொசுக்கினாலும் – தோழர்களைத் தூக்கினில் ஏற்றினாலும் விட்டுப்பிரியாது – செங்கொடி வீரம் குறையாது” என்று தோழர் ஜீவா முழங்கியதைப் போல கொள்கை உறுதி குலையாமல் குன்றமென நிமிர்ந்து நின்ற பண்புக்குரியவர் தீரமிகு தோழர் நல்லகண்ணு. கொள்கைக் கனல் அகத்துளே தீயாய் மூண்டு தகிக்க, முகத்திலே புன்னகையுடன் அமைதியாக வலம் வந்த அரசியல் எரிமலை அவர்!

முத்தமிழறிஞர் கலைஞருடன் என்றென்றும் இனிய நட்பைப் பூண்டிருந்தவர். பொடா, எஸ்மா, டெஸ்மா போன்ற அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிரான போராட்டக் களங்களில், தலைவர் கலைஞருடன் தோளோடு தோள் நின்று களமாடியவர். பொதுவுடைமைக் கருத்தியலும், திராவிட இயக்கக் கருத்தியலும் சமூக மாற்றத்துக்கான இரட்டைக்குழல் துப்பாக்கியாகச் செயல்பட வேண்டிய கோட்பாட்டுத் தோழமைகள் என்பதில் எப்போதுமே உறுதியாக இருந்தவர். முத்தமிழறிஞர் கலைஞர் தமது ஆட்சிக் காலத்தில் தோழர் திரு. நல்லகண்ணு அவர்களுக்கு அம்பேத்கர் விருதை வழங்கிச் சிறப்பித்தார்.

நமது திராவிட மாடல் அரசின் சார்பில் தோழர் அவர்களுக்குத் தகைசால் தமிழர் விருதை வழங்கும் வாய்ப்பைப் பெற்றது எனது பெரும் பேறு! எப்போதும் என்மேல் அன்பும் பாசமும் கொண்டவராக இருந்தார். திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு உருவாக்கிய திட்டங்களை மனப்பூர்வமாக வரவேற்றார். அய்யாவை அவரது ஒவ்வொரு பிறந்தநாளிலும் சந்தித்து வாழ்த்து பெறுவதை நான் வழக்கமாக வைத்திருந்தேன். தோழர் திரு. நல்லகண்ணு அய்யா அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது நமக்குப் பெருமை. அவர் பெற்ற விருதுகள், பரிசுகள் எவையானாலும், அவற்றோடு தொகை அனைத்தையும் கட்சிக்காகவும், மக்கள் நலனுக்காக அரசிடம் ஒப்படைத்த அப்பழுக்கற்ற தலைவர் அவர்! “தான் வேறு, இயக்கம் வேறு என்று பிரித்துப் பார்க்காமல், இயக்கத்திற்காக இயக்கமாகவே வாழ்ந்தவர்” என்று அவரது நூற்றாண்டு விழாவில் நான் குறிப்பிட்டது இன்றும் நினைவலைகளாக வந்து என் நெஞ்சில் மோதுகிறது.

தோழரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும்! மறக்க முடியாத அந்த மாமனிதரின் வாழ்வே நமக்காக அவர் விட்டுச் சென்றிருக்கும் மகத்தான செய்தி. அதுவே நமக்கு வழிகாட்டும் ஒளியாகட்டும்! பாட்டாளி மக்களுக்காகவே வாழ்ந்து நிறைந்த பகட்டில்லாத் தோழர் திரு. நல்லகண்ணு அவர்களின் நினைவும், புகழும் என்றென்றும் காலத்தால் அழியாத கல்வெட்டாக மக்கள் மனதில் நிலைத்திருக்கும்! தமிழ்நாட்டின் உயரிய விருது பெற்ற நம் தகைசால் தமிழரை – இனிய தோழரை முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம்!” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்..

RUPA

Next Post

தகைசால் தமிழர் நல்லகண்ணு மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு..! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!

Wed Feb 25 , 2026
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.. முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததால் நல்லக்கண்ணு பிற்பகல் 1.55 மணியளவில் காலமானார்.. எளிமை, நேர்மையின் அடையாளமாகவும், வாழ்நாள் போராளியாகவும் தவிர்க்க முடியாத சகாப்தமாக இருந்த நல்லகண்ணுவின் மறைவு தமிழக அரசியலில் ஏற்பட்ட பேரிழப்பாகும்.. நல்லகண்ணு மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் நல்லகண்ணு மறைவுக்கு உருக்கமாக இரங்கல் […]
CPI Nallakannu

You May Like