ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த பிச்சாண்டாம்பாளையத்தை சேர்ந்தவர் நர்மதா. இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவருக்கும், இவரது கணவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி நர்மதா கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து தனது தோழி வீட்டிற்குச் செல்லத் திட்டமிட்டிருந்த அவர், மர்மமான முறையில் மாயமானார். இந்நிலையில், பிப்ரவரி 10-ஆம் தேதி ரங்கம்பாளையம் புறவழிச்சாலையில் தலையில் கல்லைப் போட்டு நசுக்கப்பட்ட நிலையில் அவரது சடலத்தை காவல்துறையினர் கண்டெடுத்தனர்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. ரயில் நிலையத்தை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, நர்மதாவை மர்ம நபர் ஒருவர் பின்தொடர்ந்து சென்றது உறுதியானது. விசாரணையில், ஈரோடு ரயில் நிலையப் பகுதியில் சுற்றித் திரிந்த 17 வயதுடைய தீபன்குமார் (திருநங்கை) என்பவர் நர்மதாவை தனியான இடத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றது தெரியவந்தது. அங்கு வைத்து நர்மதாவிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றபோது, அவர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துப் போராடியுள்ளார்.
தனது ஆசைக்கு இணங்காத நர்மதாவின் பிடிவாதத்தால் ஆத்திரமடைந்த தீபன்குமார், அருகிலிருந்த பெரிய கல்லை எடுத்து நர்மதாவின் தலையில் போட்டு அவரை துடிதுடிக்கக் கொன்றுவிட்டுத் தப்பியோடியுள்ளார். சிசிடிவி ஆதாரங்களை வைத்துத் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்திய காவல்துறையினர், குற்றவாளி தீபன்குமாரை கைது செய்தனர். விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
Read More : சிலிண்டர் விலை முதல் பிஎஃப் பணம் வரை..!! மார்ச் 1இல் அதிரடி மாற்றம்..!! முக்கிய அப்டேட்ஸ் இதோ..!!



