சாதாரண காய்ச்சல் முதல் தீராத இருமல் வரை எது வந்தாலும், நம் வீடுகளில் முதலில் தடை விதிக்கப்படுவது வாழைப்பழத்திற்குத்தான். “வாழைப்பழம் சாப்பிட்டால் சளி அதிகமாகும்” என்பது காலம் காலமாகத் தொடர்ந்து வரும் ஒரு பொதுவான நம்பிக்கை. ஆனால், இந்த நம்பிக்கைக்குப் பின்னால் இருக்கும் உண்மை என்ன? இது குறித்து அலோபதி மற்றும் ஆயுர்வேத மருத்துவ நிபுணர்கள் முன்வைக்கும் விளக்கங்களை இங்கே விரிவாகக் காண்போம்.
மருத்துவ அறிவியல் கூறுவது என்ன..?
சஃப்தர்ஜங் மருத்துவமனையின் நிபுணர் டாக்டர் தீபக் சுமன் இதுகுறித்துக் கூறுகையில், “வாழைப்பழத்தில் உடலுக்குத் தேவையான பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 ஆகிய சத்துக்கள் அபரிமிதமாக உள்ளன. ஒருவருக்குச் சளி பிடிப்பதற்கும் வாழைப்பழம் சாப்பிடுவதற்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக மருத்துவ அறிவியலில் எந்த ஆதாரமும் இல்லை” என்கிறார். இருப்பினும், ஏற்கனவே சளி அல்லது இருமல் பாதிப்பு உள்ளவர்கள் வாழைப்பழம் சாப்பிடும்போது, சிலருக்கு அது அசௌகரியத்தை ஏற்படுத்தலாம் என்பதால் எச்சரிக்கை அவசியம். ஆனால், வாழைப்பழம் மட்டுமே சளியை உருவாக்குகிறது என்பது அறிவியல் பூர்வமான உண்மை அல்ல.
ஆயுர்வேத நிபுணர் டாக்டர் ஆர்.பி. பராஷர் இதுபற்றி விளக்குகையில், “ஆயுர்வேதத்தின்படி வாழைப்பழங்கள் குளிர்ச்சித் தன்மை கொண்டவை. இவை உடலில் கபத்தை (சளியை) அதிகரிக்கும் இயல்புடையவை எனக் கருதப்படுகிறது. இதனால் தான் குளிர்காலங்களிலும், ஏற்கனவே சளி பாதிப்பு உள்ளவர்களுக்கும் வாழைப்பழத்தைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது” என்கிறார். சாதாரண உடல்நிலை கொண்டவர்கள் வழக்கமான நாட்களில் வாழைப்பழம் சாப்பிடுவதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றாலும், உடல் இயல்பிலேயே சளித் தொந்தரவு உள்ளவர்கள் கவனமாக இருப்பது நல்லது.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்..?
வாழைப்பழம் ஆரோக்கியமானது என்றாலும், சில குறிப்பிட்ட பாதிப்பு உள்ளவர்கள் இதனைக் கவனத்துடன் கையாள வேண்டும்:
* அடிக்கடி சளி மற்றும் தும்மல் தொந்தரவால் அவதிப்படுபவர்கள்.
* ‘அலர்ஜிக் ரினிடிஸ்’ (Allergic Rhinitis) எனப்படும் ஒவ்வாமை பாதிப்பு உள்ளவர்கள்.
* தொண்டை தொற்று அல்லது டான்சில் (Tonsils) வீக்கம் உள்ளவர்கள்.
வாழைப்பழத்தின் நன்மைகள் :
சளி குறித்த பயத்தை தாண்டி, வாழைப்பழத்தில் ஒளிந்துள்ள ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். இது உடலுக்கு உடனடி ஆற்றலை (Energy) வழங்குகிறது. இதிலுள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்திற்கும், நார்சத்து செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகிறது. மேலும், இதிலுள்ள வைட்டமின் பி6 நரம்பு மண்டலத்தைச் சீராக வைக்கத் துணைபுரிகிறது. சுருக்கமாக சொன்னால், உங்கள் உடல்நிலையைப் பொறுத்து சரியான நேரத்தில் வாழைப்பழத்தை எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்குப் பெரும் நன்மையைத் தரும்.
Read More : சிலிண்டர் விலை முதல் பிஎஃப் பணம் வரை..!! மார்ச் 1இல் அதிரடி மாற்றம்..!! முக்கிய அப்டேட்ஸ் இதோ..!!



