பெண் குழந்தையை பெற்ற ஒவ்வொரு பெற்றோரின் மனதிலும் ஓடும் முதன்மையான கவலை, அவர்களின் கல்வி மற்றும் திருமண எதிர்காலத்தைச் சீராக அமைப்பதை பற்றியதாகவே இருக்கும். இதற்காக சிறுகச் சிறுகப் பணம் சேமிக்கப் பல வழிகளைத் தேடி அலைபவர்களுக்கு, மத்திய அரசின் ஒரு சிறப்பான திட்டம் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. குறிப்பாக, பெண் குழந்தைகளின் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் நுணுக்கங்களை நாம் விரிவாகப் பார்ப்போம்.
மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் ‘பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா’ (PMMVY) திட்டம், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்தை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்டது. பாதுகாப்பான பிரசவத்தை ஊக்குவிக்கும் நோக்கில் 2017-ஆம் ஆண்டு முதல் புதிய வடிவில் செயல்பட்டு வரும் இத்திட்டத்தின் கீழ், முதல் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்க்கு ரூ.5,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான அம்சம் என்னவென்றால், இரண்டாவது முறையாகப் பெண் குழந்தையைப் பெறும் தாய்மார்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.6,000 நேரடியாக வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவி இரண்டு கட்டங்களாக பிரித்து வழங்கப்படுகிறது. முதல் முறை தாயாகும் பெண்களுக்கு, கர்ப்பத்தை முறையாக பதிவு செய்தவுடன் ரூ.3,000-ம், குழந்தை பிறந்த பிறகு எஞ்சிய ரூ.2,000-ம் கிடைக்கிறது. ஒருவேளை இரண்டாவது குழந்தை ஒரு பெண் குழந்தையாக பிறக்கும் பட்சத்தில், எவ்விதத் தவணைகளும் இன்றி ஒரே கட்டமாக ரூ.6,000 சம்பந்தப்பட்ட தாயின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும், அவர்களுக்கு ஆரம்பக்கால ஊட்டச்சத்தை வழங்கவும் இந்த கூடுதல் நிதியுதவி வழிவகை செய்கிறது.
தகுதிகள் :
இத்திட்டத்தின் பலனைப் பெற சில முக்கிய நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது. விண்ணப்பிக்கும் பெண்கள் குறைந்தபட்சம் 19 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் 8 லட்ச ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியம். குழந்தை பிறந்து 270 நாட்களுக்குள் (சுமார் 9 மாதங்கள்) இதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி..?
தகுதியுள்ள பயனாளிகள் https://pmmvy.wcd.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாகத் தாங்களாகவே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் வசதி இல்லாதவர்கள், தங்கள் வசிப்பிடத்திற்கு அருகிலுள்ள அங்கன்வாடி மையங்கள் அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகித் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து இந்த நிதியுதவியைப் பெற்றுக்கொள்ளலாம்.
Read More : காலையிலேயே ஷாக்..!! அதிமுகவுடன் கூட்டணி கிடையாது..!! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விக்கிரமராஜா..!!



