இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டிசிஎஸ் (TCS), தனது ஊழியர்களுக்கு ஒரு மெகா அறிவிப்பை வெளியிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களின் வருகையால் ஐடி துறையில் நிலவும் கடும் போட்டியை சமாளிக்க, அனுபவம் வாய்ந்த திறமையாளர்களை தேடிப் பிடிக்கும் பணியில் நிறுவனம் இறங்கியுள்ளது. இதற்காக ‘பிரிங் யுவர் படி’ (Bring Your Buddy) என்ற பெயரில் ஊழியர்களுக்கான பரிந்துரைத் திட்டத்தை (Employee Referral Scheme) மீண்டும் புதுப்பொலிவுடன் டிசிஎஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின்படி, தகுதியும் திறமையும் வாய்ந்த நபர்களை டிசிஎஸ் ஊழியர்கள் தங்கள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர பரிந்துரைக்கலாம். அப்படி பரிந்துரைக்கப்படும் நபர், எத்தனை நாட்களில் பணியில் சேருகிறார் என்பதைப் பொறுத்து ஊக்கத்தொகை மாறுபடும். உதாரணமாக, பரிந்துரைக்கப்பட்ட 30 நாட்களுக்குள் அந்த நபர் பணியில் இணைந்துவிட்டால், அவரைப் பரிந்துரை செய்த ஊழியருக்கு ரூ.40,000 போனஸாக வழங்கப்படும். ஒருவேளை அவர் சேர எடுத்துக்கொள்ளும் காலம் 31 முதல் 45 நாட்களாக இருந்தால் ரூ.30,000-மும், 46 முதல் 60 நாட்களாக இருந்தால் ரூ.20,000-மும் போனஸாகக் கிடைக்கும். மேலும், 61 முதல் 90 நாட்களுக்குள் இணைந்தால் ரூ.15,000 வரை ரெஃபரல் போனஸ் பெற முடியும்.
சுமார் 4 முதல் 15 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்ட நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்களை (Mid to Senior level) நிறுவனத்திற்குள் கொண்டு வருவதே டிசிஎஸ்-ஸின் முக்கிய இலக்காகும். இது குறித்து ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள மின்னஞ்சலில், “டிசிஎஸ் நிறுவனத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகும் திறமையாளர்களை அழைத்து வாருங்கள்” என உற்சாகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் கடந்த 20 ஆண்டுகளில் ஏராளமான சிறந்த ஊழியர்களைத் தாங்கள் கண்டெடுத்துள்ளதாகத் தெரிவிக்கும் நிறுவனம், ஊழியர்களின் பங்களிப்பை இதில் அதிகம் எதிர்பார்க்கிறது.
இந்த போனஸ் தொகையைப் பெறுவதற்குச் சில நிபந்தனைகளையும் டிசிஎஸ் விதித்துள்ளது. பரிந்துரைக்கப்பட்டு வேலைக்குச் சேரும் நபர், அந்த நிறுவனத்தில் தொடர்ந்து குறைந்தது 6 மாத காலம் பணியாற்றுவது கட்டாயமாகும். அப்போதுதான் பரிந்துரை செய்த ஊழியருக்கு முழுமையான போனஸ் தொகை கைக்கு வந்து சேரும். இந்தச் சிறப்புப் பரிந்துரைத் திட்டம் வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தங்களுக்குத் தெரிந்த திறன்மிகு நண்பர்களைப் பரிந்துரைப்பதன் மூலம் டிசிஎஸ் ஊழியர்கள் லட்சக்கணக்கில் கூடுதல் வருமானம் ஈட்ட ஒரு நல்வாய்ப்பு கிடைத்துள்ளது.



