எச்சரிக்கை உடன் இருங்க.. வெளியே வர வேண்டாம்.. ஈரான், இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை..!

iran israel

மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் இன்று முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இஸ்ரேலில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், எப்போதும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.


இந்த அறிவுரை, ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு வெளியாகியுள்ளது. நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்பதால், இஸ்ரேல் அரசின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும், அறிவுறுத்தல்களையும் இந்தியர்கள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் ஆயிரக்கணக்கான இந்திய தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் நிபுணர்கள் வசித்து வருவதால், எதிர்தாக்குதல் அல்லது வன்முறை பரவல் ஏற்படும் அபாயம் குறித்து இந்த எச்சரிக்கை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

மேலும், ஈரானில் உள்ள இந்திய தூதரகம் சனிக்கிழமை இந்திய குடிமக்களுக்கு ஒரு ஆலோசனையை வெளியிட்டது, அவர்கள் “மிகவும் எச்சரிக்கையாக” இருக்கவும், வெளியில் செல்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தி உள்ளது.. தூதரகம் ஒரு X பதிவில், “ஈரானில் உள்ள அனைத்து இந்தியர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், தேவையற்ற நடமாட்டத்தைத் தவிர்க்கவும், முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.

இந்தியர்கள் செய்திகளைக் கண்காணிக்கவும், ஈரானில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து விழிப்புடன் இருக்கவும், இந்திய தூதரகத்திலிருந்து மேலும் வழிகாட்டுதலுக்காக காத்திருக்கவும் இது அறிவுறுத்தியது. +989128109115, +989128109109, +989128109102 மற்றும் +989932179359 என்ற எண்களில் மக்கள் தொடர்பு கொள்ள அவசர தொடர்பு விவரங்களையும் தூதரகம் பகிர்ந்து கொண்டது.

தெஹ்ரானில் தாக்குதல் – உச்சக்கட்ட பதற்றம்

சனிக்கிழமை, இஸ்ரேல் மத்திய தெஹ்ரானில் துல்லியமான தாக்குதலை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கேமேனி அலுவலகங்கள் உள்ள பகுதியின் அருகே புகை மேகங்கள் எழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினர். ஈரான் அரசு தொலைக்காட்சி வெடிப்புகள் நடந்ததை உறுதிப்படுத்தினாலும், சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்து எந்த விவரங்களையும் வெளியிடவில்லை.

இந்த தாக்குதலின் பின்னணியில், ஈரான்–அமெரிக்கா அணு விவகாரம் தொடர்பான மோதல் நீடித்து வருவதாகவும், அமெரிக்கா ஈரானுக்கு அழுத்தும் வகையில் போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை அந்தப் பகுதியில் குவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் இந்த நடவடிக்கை “அபாயங்களை நீக்கும் முயற்சி” என விளக்கியுள்ளார்.

இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை, விமான சேவை நிறுத்தம்

தெஹ்ரானில் வெடிப்புகள் நடந்த அதே நேரத்தில், இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன. ஏவுகணை தாக்குதல் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில், இது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. மேலும், இஸ்ரேல் தனது வான்வெளியை தற்காலிகமாக மூடி, பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்துள்ளது.

இதற்கு பதிலடியாக, ஈரான் தனது வான்வெளியை மூடியதுடன், டெஹ்ரானில் மொபைல் சேவைகளையும் துண்டித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் நகரம் முழுவதும் தொடர்பு தடை ஏற்பட்டுள்ளது. அணு பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள இந்த நேரத்தில், இச்சம்பவங்கள் பெரிய போராக மாறும் அபாயம் இருப்பதாக அச்சம் எழுந்துள்ளது.

இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையில் இருக்க வேண்டும்

இஸ்ரேலில் வசிக்கும் 18,000-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் மற்றும் ஏராளமான தொழிலாளர்களின் பாதுகாப்பே முதன்மை என இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது. எந்தவித அலட்சியமும் வேண்டாம் என்றும், பாதுகாப்பு வழிமுறைகள் உயிர்காக்கும் வழிகாட்டுதல்களாக கருதப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவைப்பட்டால் வெளியேற்றும் (evacuation) திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன என்றாலும், தற்போதைய நிலையில் சூழ்நிலை விழிப்புணர்வுடன் இருப்பதே முக்கியம் என தூதரகம் கூறியுள்ளது. இந்தியா அரசு நிலைமையை நெருக்கமாக கவனித்து வருவதுடன், தனது குடிமக்களின் பாதுகாப்புக்கு முழு முன்னுரிமை அளித்து வருகிறது.

RUPA

Next Post

பிரதமர் மோடி தலைமையில் மதுரையில் நாளை பிரம்மாண்ட பொதுக்கூட்டம்..! NDA மேடையில் அண்ணா, பெரியார் படங்கள்..!

Sat Feb 28 , 2026
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றனர்.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என்று 4 முனைப் போட்டி நிலவுகிறது.. அதன்படி அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் அன்புமணியின் பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் […]
modi nda madurai

You May Like