மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் தனது ஆக்ரோஷமான பதிலடி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. சர்வதேச அளவில் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் நடந்த இந்தத் தாக்குதல்கள், உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளன.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணித்த ‘ஸ்கைலைட்’ (Skylight) என்ற எண்ணெய் கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் பலத்த சேதமடைந்த கப்பல் கடலில் மூழ்க தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கப்பலில் பணியாற்றிய 15 இந்தியர்கள் உட்பட மொத்தம் 20 ஊழியர்களை ஓமன் நாட்டுப் பாதுகாப்புப் படையினர் துரிதமாகச் செயல்பட்டு பத்திரமாக மீட்டுள்ளனர். இந்தத் தாக்குதலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மறுபுறம், அரபிக்கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் அதிநவீன ‘ஆபிரகாம் லிங்கன்’ (Abraham Lincoln) விமானம் தாங்கிப் போர்க்கப்பல் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) விடுத்துள்ள அறிக்கையில், 4 அதிநவீன ஏவுகணைகளை வீசி இந்த தாக்குதலை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) நடவடிக்கைக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் அமெரிக்கப் போர்க்கப்பல் சேதமடைந்துள்ளதாகவும் ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க வீரர்கள் உயிரிழப்பு :
ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அமெரிக்கத் தரப்பில் முதல்முறையாக உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன. இந்தத் தாக்குதல்களில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 5 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அமெரிக்கத் தரப்பு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. உயிரிழந்த வீரர்களின் விவரங்கள் 24 மணி நேரத்திற்குப் பிறகு வெளியிடப்படும் என்றும், கள நிலைமை தற்போது மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.



