அமெரிக்காவின் F-15 போர் விமானம் ஒன்று குவைத் நாட்டில் விழுந்து நொறுங்கியதாக ஈரான் கூறியுள்ளது. இந்த விபத்துக்கு முன், விமானத்தில் இருந்த அமெரிக்க விமானி பராசூட் மூலம் வெளியேறியதாக சமூக வலைதளங்களில் வெளியான காணொளிகள் தெரிவிக்கின்றன. இந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கும் காட்சியை ஈரான் அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.. எனினும் இந்த விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை..
சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட வீடியோக்களில், வானில் இருந்து ஒரு பராசூட் கீழே இறங்குவது தெளிவாக காணப்படுகிறது. மேலும், உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள சில காட்சிகளில், விமானத்திலிருந்து வெளியே குதித்த பிறகு தரையில் இருக்கும் அமெரிக்க விமானி எனக் கருதப்படும் நபர் காணப்படுகிறார்.
இந்த விமான விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியிடப்படவில்லை. அதேபோல், விமானத்தில் இருந்த குழுவினரின் உடல்நிலை பற்றிய தகவலும் உடனடியாக தெரியவில்லை.
விபத்து நடந்த நேரத்தில் அந்த விமானம் போர் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததா அல்லது பயிற்சியில் இருந்ததா என்பதும் தெளிவாகவில்லை. இந்த சம்பவம் குறித்து அமெரிக்க மற்றும் குவைத் அதிகாரிகளிடமிருந்து மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
ஈரான் – அமெரிக்கா போர் நிலை
தற்போது நடைபெற்று வரும் இந்த மோதல், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய ஒருங்கிணைந்த இராணுவ தாக்குதல்களுக்குப் பிறகு வெடித்தது. இந்த தாக்குதல்களின் நோக்கம், தெஹ்ரானின் ஏவுகணை மற்றும் இராணுவ கட்டமைப்புகளை முடக்குவதாகும்.
ஆரம்ப கட்ட தாக்குதலில், ஈரானின் உயர்மட்ட தலைமைக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாகவும், இதில் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உட்பட முக்கிய தலைவர்கள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஈரான் அமெரிக்க இலக்குகளை நோக்கி பரவலான பதிலடி நடவடிக்கைகளை தொடங்கியது.
ஈரான், ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் வளைகுடா பகுதிகளில் உள்ள அமெரிக்க சொத்துகள், பிராந்திய தலைநகரங்கள் மற்றும் கூட்டணி படைகளை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நடத்தியது. இந்த பதிலடி தாக்குதல்கள் பல நாடுகளுக்கு பரவியுள்ளன.
குவைத், பஹ்ரைன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் வான்வெளிகளில் ஈரான் ஏவிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல நாடுகளில் வான்வெளி மூடப்பட்டு, இராணுவத்தினரும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்க படைகள் பதிலடி கொடுத்து வருகின்றன.. இதில் கடற்படை நடவடிக்கைகளும் இடம்பெற்றுள்ளன. கடந்த பல தசாப்தங்களில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்ட மிகக் கடுமையான இராணுவ மோதல்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.
Read More : ‘பாம்பின் தலையை வெட்டி விட்டோம்..’ ஈரானில் உள்ள உள்ள IRGC தலைமையகத்தை அழித்த அமெரிக்கா..!



