விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி கிராமத்தில் காருடன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி கிராமத்தில் நேற்று (03.03.2026) காலை சுமார் 08.30 மணியளவில் புதுவை – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் TN10 BE 8935 என்ற பதிவெண் கொண்ட கார் ஒன்று எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலை அருகிலுள்ள தனியருக்குச் சொந்தமான கிணற்றில் விழுந்து மூழ்கியதில் காரில் பயணம் செய்த சென்னை, கெருகம்பாக்கத்தைச் சேர்ந்த திரு.ராஜா (வயது 44) த/பெ.மணி மற்றும் திரு.வினோத் (வயது 39) த/பெ. சேகர்; கொளப்பாக்கம் காந்தி தெருவைச் சேர்ந்த திரு.ஜெயமுருகன் (வயது 43) த/பெ.ஆதிகேசவன் மற்றும் மெளலிவாக்கம், பொன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த திரு.சேகர் (வயது 27) த/பெ.குமார் ஆகிய 4 நபர்கள் கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இந்த விபத்தில் உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 இலட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.



