தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனையை எடுத்துக் கூறினால், காது கொடுத்து கேட்பதில்லை என்பதால் பாஜக கூட்டணியில் இருந்து தனியாக பிரிந்து வந்துவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் சங்ககிரியில் அதிமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “முதலமைச்சர் ஸ்டாலினின் ஸ்பெயின் பயணம் தொடர்பாக மக்களுக்கு சந்தேகம் இருக்கிறது. தமிழக மக்களின் பிரச்சனைகளை யார் சரி செய்வார்களோ, அவர்களுக்கு பிரச்சனையின் அடிப்படையில் ஆதரவு அளிக்கப்படும்.
அதிமுக தலைமையிலான சிறப்பான கூட்டணி அமையும். சென்னையில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனையை எடுத்துக் கூறினால், காது கொடுத்து கேட்பதில்லை என்பதால் பாஜக கூட்டணியில் இருந்து தனியாக பிரிந்து வந்துவிட்டோம்” என குற்றம்சாட்டினார்.