கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதம், 12, 19 ஆகிய தேதிகளில் விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார்.
விஜய்யிடம் சுமார் 12 மணி நேரங்களுக்கு மேல் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.. இந்த விசாரணையில், 7 மணி நேரம் தாமதமானது ஏன்? கூட்ட நெரிசல் பற்றி தெரியாதா உள்ளிட்ட கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் எழுப்பினர்.. எனினும் கூட்டத்தை கட்டுப்படுத்த தவறியது காவல்துறை தான், போலீசாரின் வழிகாட்டுதல்களை பின்பற்றியே வாகனத்தை இயக்கியதாகவும் விஜய் கூறியிருந்தார்..
அப்போது, கரூர் கூட்ட நெரிசலில் சதி நடந்திருப்பதாகவும், சிபிஐ தான் அதனை கண்டுபிடித்து தர வேண்டும் என்று விஜய் கூறியிருந்தார்.. மேலும் இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் விஜய் பெயரும் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது..
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக ஏற்கனவே 2 முறை விஜய் ஆஜரான நிலையில் தற்போது சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.. அதன்படி நாளை விஜய் மீண்டும் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
எனினும் இந்த முறை விஜய் ஆஜராவதில் இருந்து விலக்கு கோர முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.. தேர்தல் வேலைகளை காரணம் காட்டி, விஜய் நாளை சிபிஐ விசாரணைக்கு ஆஜராக மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன..
தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருமாறு விஜய்க்கு பாஜக நெருக்கடி கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. என்.டி.ஏ கூட்டணியில் விஜய்க்கு 60 தொகுதிகள் வரை வழங்க முன் வருவதாகவும், மேலும் துணை முதல்வர் பதவி கொடுக்கவும் பாஜக அதிமுகவுக்கு அறிவுறுத்தி உள்ளதாம்.. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மூலம் விஜய்யிடம் பாஜக தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
எனினும் என்.டி.ஏ கூட்டணியில் இணைய விஜய் உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.. மேலும் விஜய்க்கு துணை முதலமைச்சர் பதவி என்பதெல்லாம் முழுக்க முழுக்க வதந்தி என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.. தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் இபிஎஸ் தான்.. நிச்சயம் என்.டி.ஏ கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.
Read More : Breaking : கரூர் பெருந்துயரம்.. விஜய் 3-வது முறையாக சிபிஐ சம்மன்.. நாளை ஆஜராக உத்தரவு..!



