இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான IndiGo நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்த பீட்டர் எல்பர்ஸ் பதவியில் இருந்து விலகியுள்ளார். பெரிய அளவில் ஏற்பட்ட செயல்பாட்டு நெருக்கடியின் மூன்று மாதங்களுக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நெருக்கடியால் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கலில் சிக்கியிருந்தனர்.
நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், நிரந்தர தலைமை நிர்வாக அதிகாரி நியமிக்கப்படும் வரை, நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் ராகுல் பாட்டியா Bhatia இடைக்காலமாக CEO பொறுப்பை ஏற்க உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
பீட்டர் எல்பர்ஸ் ஏன் ராஜினாமா செய்தார்?
இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, பீட்டர் எல்பர்ஸ் “தனிப்பட்ட காரணங்களால்” உடனடியாக பதவியை விட்டு விலகியதாக தெரிவித்துள்ளது. அவரது பதவிக்காலம் சமீபத்தில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த பெரிய அளவிலான விமான ரத்து மற்றும் தாமதம் சம்பவங்கள் தான் அதற்கு காரணம்… இந்த பிரச்சினையால் 3 லட்சத்துக்கும் அதிகமான பயணிகளின் பயணத் திட்டங்கள் பாதிக்கப்பட்டன.
2025 டிசம்பர் 3 முதல் 5 வரை மூன்று நாட்களில், இண்டிகோ நிறுவனம் 2,500-க்கும் அதிகமான விமானங்களை ரத்து செய்தது. மேலும் சுமார் 1,900 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
பைலட்டுகள் அதிக நேரம் பணிபுரிவதால் ஏற்படும் சோர்வை தடுக்க புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன. அந்த விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்களால் இந்த செயல்பாட்டு நெருக்கடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது நிறுவனத்தின் திட்டமிடலில் இருந்த பலவீனங்களையும் வெளிப்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவின் விமானப் பாதுகாப்பு கட்டுப்பாட்டு அமைப்பான டிஜிசிஏ நிறுவனம், இண்டிகோ மீது ரூ.22.20 கோடி அபராதம் விதித்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து பீட்டர் எல்பர்ஸ்க்கு நேரடியாக காரணம் கூற நோட்டீஸும் அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



