நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததன் பின்னணி மற்றும் அவரது நோக்கம் என்ன என்று சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் விஜய் கடந்த வாரம் தமிழக வெற்றி கழகம் என்ற தனது கட்சிப் பெயரை அறிவித்து அரசியலுக்குள் நுழைந்தார். இந்நிலையில், பிரபல சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி அளித்த நேர்காணல் ஒன்றில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ”விஜய் அரசியலுக்கு வந்ததன் அடிப்படை நோக்கத்தை புரிந்துகொள்ள வேண்டும். அவர் தமிழ்நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியலுக்கு வரவில்லை. அப்படி அவர் சொல்லுவார். அடிப்படை என்ன என்றால், ஒரு ஜோதிடர் உங்கள் ஜாதகத்திற்கு நீங்கள் முதலமைச்சர் ஆகலாம் என்கிறார். அதை உண்மை என்று நம்பி இன்று கட்சி தொடங்கி அவர் அரசியலுக்கு வருகிறார். அவரது நோக்கம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் நாற்காலியில் அமர வேண்டும் என்பதுதான்.
ஏனென்றால், இவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது நோக்கமாக இருந்திருந்தால் 2024 மக்களவைத் தேர்தலிலேயே களத்தில் குதித்திருக்க வேண்டும். ஆனால், நீங்கள் இப்போது கட்சியை தொடங்கிவிட்டீர்கள். அடுத்த 2 மாதம் கழித்து வரக் கூடிய தேர்தலில் போட்டியிட மாட்டேன், 2 வருடம் கழித்துதான் போட்டியிடுவேன் என்று நீங்கள் விரும்பக் கூடாது. ஏனென்றால், இந்த 2024 தேர்தல் என்பது மிக முக்கியமான தேர்தல். இந்த தேர்தலில் பாஜகவை நாட்டை விட்டு அனுப்பவில்லை என்றால் இந்தியாவை ஜனநாயக நாடு என்று சொல்லவே முடியாது. அதை நோக்கி இவர்கள் நகர்த்தி சென்றுவிடுவார்கள்.
இந்தியாவை ஒரு காவி தேசமாக இவர்கள் மாற்றிவிடுவார்கள். எவ்வளவு பெரிய ஆபத்து. அவ்வளவு பெரிய பேராபத்து நடக்கக்கூடிய இந்த தேர்தலில் நீங்கள் கலந்துகொள்ளாமல் நான் ஒரு பார்வையாளராக ஒதுங்கி இருக்கிறேன் என்று சொல்லும்போதே உங்கள் சுயநலம் தெரிகிறது. நாடு எக்கேடு கெட்டுப்போகட்டும், மக்கள் சாகட்டும், புல்டோசரை விட்டு வீடுகளை இடிக்கட்டும், பல மசூதிகளை இடித்துவிட்டு கோயில் கட்டட்டும் எனக்கு கவலை இல்லை. நான் 2026 தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சர் இருக்கையில் அமர வேண்டும் என்று நினைப்பதை விட வேறு சுயநலம் இருக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.