அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வருவதால் மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வருகின்றது.. இந்த நிலையில் ஓமனில் உள்ள சலாலா துறைமுகத்தில் உள்ள எண்ணெய் சேமிப்பு தொட்டிகளை ஈரானிய ட்ரோன்கள் குறிவைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் அப்பகுதியே புகை மண்டலம் போல் காட்சியளித்தது..
ஓமன் அரசு தொலைக்காட்சி இந்த தகவலை தெரிவித்துள்ளது.. மேலும் பிரிட்டிஷ் கடல்சார் பாதுகாப்பு நிறுவனமான ஆம்ப்ரேயும் முக்கிய உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை உறுதிப்படுத்தியுள்ளது.
ஆன்லைனில் பரவும் ஒரு வீடியோவில், ஈரானிய ட்ரோன்கள் எரிசக்தி வசதிகளைத் தாக்கும் தருணத்தைக் காட்டுகிறது. வளைகுடா பிராந்தியம் முழுவதும் உள்ள முக்கியமான எரிசக்தி தளங்களை ஈரான் மீண்டும் மீண்டும் குறிவைத்து வருவதை பார்க்க முடிகிறது.
இந்த குறிப்பிட்ட தாக்குதலில் எந்த வணிகக் கப்பல்களும் சேதமடையவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், தாக்குதல்களுக்குப் பிறகு சிறிது நேரத்திலேயே எண்ணெய் சேமிப்பு தொட்டிகளில் இருந்து தீப்பிழம்புகள் மற்றும் அடர்த்தியான புகை எழுவதைக் காண முடிந்தது.
தாக்குதலைத் தொடர்ந்து, ஓமானின் சுல்தான் ஹைதம் பின் தாரிக் அல் சையத், ஓமானி எல்லைக்குள் நடக்கும் தாக்குதல்கள் குறித்து கடுமையான கவலைகளை தெரிவிக்க ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனைத் தொடர்பு கொண்டார். நடந்து வரும் மோதலில் ஓமானின் நடுநிலை நிலைப்பாட்டை சுல்தான் மீண்டும் வலியுறுத்தினார், மேலும் அதன் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க நாடு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று வலியுறுத்தினார். ஈரானின் புதிய உச்ச தலைவராக மோஜ்தபா காமெனி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சுல்தான் வாழ்த்து தெரிவித்த சிறிது நேரத்திலேயே இந்த தாக்குதல்கள் நடந்ததாக கூறப்படுகிறது..
ஹார்முஸ் ஜலசந்தி அருகே தாக்குதல்கள்
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய ஓமன் பலமுறை முயற்சித்த போதிலும், தற்போது அதிகரித்து வரும் மோதல் இராஜதந்திர முயற்சிகளை முறியடிப்பதாக கூறப்படுகிறது.. உலகின் மிக முக்கியமான கடல்சார் வர்த்தக பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி அருகே மூன்று வணிகக் கப்பல்களும் தாக்கப்பட்டன. சமீபத்திய முன்னேற்றங்கள், மோதல் ஈரானிய எல்லைகளைத் தாண்டி அண்டை வளைகுடா நாடுகளுக்குள் வேகமாக விரிவடைந்து வருவதைக் குறிக்கின்றன.
Read More : பீதி அடைய வேண்டாம், முன்பதிவு செய்த 2.5 நாட்களில் சிலிண்டர் கிடைக்கும்: மத்திய அரசு சொன்ன குட்நியூஸ்..!



