செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக, வழங்கிய கடிதத்தை ஏற்பதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், 12.2.2024 அன்று, அமைச்சர் செந்தில்பாலாஜியின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ள பரிந்துரைத்து எழுதிய கடிதத்தின் அடிப்படையில், அந்த பரிந்துரையை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் அங்கீகரித்து ராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண மோசடி வழக்கில் கடந்தாண்டு ஜூன் 13ஆம் தேதி கைது செய்யப்பட்டு செந்தில் பாலாஜி, சுமார் 6 மாதங்களுக்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனாலும், அவர் இலாகா இல்லாத அமைச்சராக அமைச்சரவையில் நீடித்து வந்தார். இந்நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்வதாக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். அவரது பரிந்துரையின் பேரில், ஆளுநர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டதாக தற்போது அறிவித்துள்ளார்.