“திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் அல்ல, காமெடியன்.. வில்லன்..” விளாசிய அன்புமணி..!

13507948 anbumani 1

திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் அல்ல, காமெடியன்: 63 வாக்குறுதிகள் மீண்டும் இடம் பெற்றது தோல்வியின் அடையாளம் என்றூ அன்புமணி தெரிவித்துள்ளார்..


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்கான எந்தத் திட்டமும் இல்லை; மக்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்யும் சதுரங்க வேட்டை வாக்குறுதிகள் தான் இடம் பெற்றுள்ளன. மொத்தத்தில் திமுக தேர்தல் அறிக்கை என்பது இந்தத் தேர்தலின் கதாநாயகனும் அல்ல… கதாநாயகியும் அல்ல. மாறாக வில்லனாகவும், காமெடியனாகவும் தான் உள்ளது.

2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 505 வாக்குறுதிகளை அளித்த திமுக, அவற்றில் வெறும் 66-&-ஐ மட்டும் தான் நிறைவேற்றியது, 439 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை ஆதாரங்களுடன் அம்பலப் படுத்தியிருந்தேன். இப்போது திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள 517 வாக்குறுதிகளில் 63 வாக்குறுதிகள் முந்தைய தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்தவை தான். அவற்றுக்கு வேறு நாமகரணங்களைச் சூட்டி புதிய வாக்குறுதிகளைக் காட்டி மோசடி செய்ய திமுக முயன்றிருக்கிறது. இது தோல்வியின் அடையாளம்.

2021-&ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள மூன்றரை லட்சம் இடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த திமுக, 50 ஆயிரம் பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கியது. ஆனால், இப்போது ஒன்றரை லட்சம் அரசு பணியிடங்கள் காலியாகுமாம்; அப்போது அந்த இடங்கள் உடனடியாக நிரப்பப்படுமாம். ஏற்கனவே காலியாக உள்ள 6 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்பத் துப்பில்லாத திமுகவுக்கு இப்படி ஒரு வாக்குறுதி அளிக்க எந்தத் தகுதியும் இல்லை.

தனியார் துறைகளில் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும்; தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 75 விழுக்காட்டை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்க வகை செய்யும் சட்டம் நிறைவேற்றப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அத்தகைய சட்டத்தையும் நிறைவேற்றவில்லை; 50 லட்சம் பேருக்கு வேலையும் வழங்கவில்லை. ஆனால், இப்போது 50 லட்சம் இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வழங்கப்படும் என்ற பழைய வாக்குறுதியையே மீண்டும் அளித்து ஏமாற்ற முயல்கிறது திமுக. இத்தகைய மோசடிகளை தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள்.

ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்வதற்கானது என்று வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றித் தான் கடந்த முறை திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால், நீட் தேர்வை ரத்தும் செய்யாமல், தமிழ்நாட்டிற்கு விலக்கும் பெறாததால் இதுவரை 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால், கொஞ்சம் கூட தோல்வி உணர்வும், குற்ற உணர்வும் இல்லாமல், நீட் என்ற பெயரை மட்டும் தவிர்த்து விட்டு, மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக்கான தேசிய நுழைவுத் தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்ய வலியுறுத்துவோம் (வாக்குறுதி எண் 1 (9)) என்று வாக்குறுதி அளித்திருக்கிறது திமுக.

அதேபோல், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவோம் என்ற வாக்குறுதியை கடந்த 50 ஆண்டுகளில் 20-ஆம் முறையாக திமுக அளித்திருக்கிறது. 18 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக அதற்காக துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை. தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாயப்பாடமாகவும், கட்டாய பயிற்றுமொழியாகவும் நடைமுறைப்படுத்துவதற்கு வக்கில்லாத திமுக, தமிழையும், எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள பிற 21 மொழிகளையும் மத்திய அரசின் ஆட்சி மொழியாக்கப் போவதாக அறிவித்திருப்பது வெட்கக்கேடான நகைச்சுவையாகும்.

தமிழ்நாட்டின் உணவு தானிய உற்பத்தி 125 லட்சம் டன்னாக உயர்த்தப்படும் என்பதை தேர்தல் வாக்குறுதியாக திமுக அறிவித்திருக்கிறது. உண்மையில் கடந்த 2023-24ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டின் உணவு உற்பத்தியை 125 லட்சம் டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக அப்போதைய வேளாண் துறை இயக்குனரும், இப்போதைய வேளாண் துறை செயலாளருமான தட்சிணாமூர்த்தி அறிவித்திருந்தார். அதன்பிறகு மூன்று ஆண்டுகளாகியும் அந்த இலக்கை எட்ட முடியாத திமுக அரசு, இப்போது அடுத்த ஐந்தாண்டுகளில் எட்டுவதற்கான வாக்குறுதியாக அந்த இலக்கை அறிவித்திருப்பது தோல்வியின் வாக்குமூலம் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களுக்கு பயனளிக்கக் கூடியதோ, வளர்ச்சிக்கு வழிவகுக்கக் கூடியதோ அல்ல. ஏற்கனவே 505 வாக்குறுதிகளை அளித்து அவற்றில் 87% வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் துரோகம் செய்த திமுகவின் வாக்குறுத்க்களை மக்கள் நம்ப மாட்டார்கள். வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்த தமிழ்நாட்டு மக்கள் உறுதி பூண்டிருப்பதால் அதன் தேர்தல் அறிக்கை யாருக்கும் பயன்படாத ஆணி தான்.” என்று குறிப்பிட்டுள்ளார்..

Read More : ” திமுக கொடுக்கும் பணத்தை வாங்கிகிட்டு, காதிலேயே விசில் ஊதி அனுப்புங்க.. ” பெரம்பூரில் விஜய் தேர்தல் பிரச்சாரம்..!

RUPA

Next Post

மத்திய பாதுகாப்பு படையில் வேலை.. 81 ஆயிரம் சம்பளம்..! நல்ல சான்ஸ்.. விட்றாதீங்க!

Mon Mar 30 , 2026
A new employment notification has been issued to fill the vacant posts of Head Constable in the Border Security Force.
Govt Job 2025

You May Like