அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா, நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக தொடங்கப்பட்டிருந்த பதவி நீக்க நடவடிக்கை சூடுபிடித்திருந்த நிலையில், திடீரென தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதம் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தனது கடிதத்தில், “இந்த முடிவுக்கான காரணங்களை விரிவாக விளக்க விரும்பவில்லை. மிகுந்த வேதனையுடன் உடனடியாக பதவி விலகுகிறேன். இந்தப் பதவியில் பணியாற்றியது எனக்கு பெருமை,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி உயர் நீதிமன்றம் நீதிபதியாக பணியாற்றி வந்த யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கச் சென்ற தீயணைப்புப் படையினர், அவரது இல்ல வளாகத்தில் உள்ள கிடங்கில் குவியல் குவியலாக பணம் இருப்பதை கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியதுடன், நீதித்துறையின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளையும் எழுப்பியது.
இதனைத் தொடர்ந்து, யஷ்வந்த் வர்மா அலகாபாத் உயர் நீதிமன்றம்க்கு மாற்றப்பட்டார். அதேசமயம், அவருக்கு எதிராக நீதித்துறை உள்ளக விசாரணை தொடங்கப்பட்டது. 2025 ஜூன் 19 அன்று, இந்திய தலைமை நீதிபதி அமைத்த விசாரணைக் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், தீ விபத்து நடந்த இடத்தில் பணம் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டதுடன், சம்பவத்தை கையாள்வதில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் கடுமையான அலட்சியம் காட்டியதாகவும் குறிப்பிடப்பட்டது.
குறிப்பாக, சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்படாததும், பறிமுதல் பட்டியல் தயாரிக்கப்படாததும் கடுமையாக சுட்டிக்காட்டப்பட்டது. இந்த அறிக்கையைத் தொடர்ந்து, 2025 ஜூலை 3 முதல், நீதிபதி வர்மாவை பதவியிலிருந்து நீக்குவதற்கான தீர்மானத்திற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கையெழுத்து சேகரிப்பு தொடங்கப்பட்டது. பல முக்கிய அரசியல் கட்சிகளும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்ததால், பதவி நீக்க நடவடிக்கை தீவிர கட்டத்தை எட்டியது. இந்த சூழலில் இன்று அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா, ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
Read more: Flash: விஜய் மீது மர்ம பொருளால் தாக்குதல்.. காரைக்குடி ரோடு ஷோவில் பரபரப்பு..!



