புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பழைமையான கட்டடம் இடிந்து விழுந்ததில், சாலையோரத்தில் நடந்து சென்றுக்கொண்டிருந்த பெண் உடல் நசுங்கி பலியானார்.
காரைக்கால் பாரதியார் சாலையில் நகராட்சி திருமண மண்டபம் அருகே ஒரு கட்டடத்தில் மதுக்கடை நடத்தப்பட்டு வந்தது. மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்றும் விதமாக, கட்டடத்தின் பொருள்கள் கடந்த 2 நாள்களாக அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்கிடையே கட்டிடத்தின் மேல் தளத்தை இடிக்க முயன்ற போது சாலையோரத்தில் இருந்த கட்டடத்தின் காங்கிரீட் மேல்தளம் இடிந்து விழுந்தது.
அப்போது, அந்தக் கட்டடம் அருகே சாலையோரமாக நடந்து சென்றுக்கொண்டிருந்த காரைக்கால் பகுதியைச் சேர்ந்த ஜூனைதா பேகம் (65) என்ற மூதாட்டி மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். தகவலின்பேரில் காரைக்கால் நகரக் காவல் நிலைய போலீஸார், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாலையில் கிடந்த இடிபாடுகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றும் பணிகள் நடைபெற்றன. பணிகள் நிறைவடைந்த நிலையில், இந்த சாலையில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. இதுகுறித்து, காரைக்கால் நகரக் காவல் நிலைய போலீஸார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: நீங்கள் மது அருந்தாதவராக இருந்தாலும் கல்லீரல் பாதிப்பு ஏற்படும்..! நிபுணர்கள் வார்னிங்..!



