Trisha: த்ரிஷாவை தவறாக பேசியவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தவர் ஏ.வி.ராஜூ. இவர் எடப்பாடி பழனிசாமி மீதும், சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இதையடுத்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய ஏ.வி.ராஜு, கூவத்தூர் சம்பவம் குறித்து சில கருத்துகளை பகிர்ந்தார். அந்தச் சம்பவத்துடன் த்ரிஷாவை தொடர்புபடுத்தி அவர் பேசிய அவதூறு கருத்துகள் சர்ச்சை ஏற்படுத்தின. அவர் பேசிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து திரையுலகைச் சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திரிஷா அனுப்பிய வக்கில் நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார்; அதில் “தன்னை பற்றி அவதூறு பேச்சுக்கு 24 மணி நேரத்திற்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டு விளம்பரம் வெளியிட வேண்டும். அவ்வாறு மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டப்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கடுமையாக எச்சரித்திருக்கிறார். அதைத்தொடர்ந்து ஏ.வி.ராஜு மன்னிப்பு கோரி இருந்தார்.
நடிகை த்ரிஷா குறித்து ஏவி ராஜு பேசியதற்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று கோவையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர்; கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் சகோதரி த்ரிஷாவை சிலர் தவறாக பேசி வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. த்ரிஷாவை தவறாக பேசியவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.