தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவர் தேர்தல் அறிக்கையில் அறிவித்த 336 வாக்குறுதிகள் பெருமளவில் கவனம் ஈர்த்துள்ளது. பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்கள், அரசு ஊழியர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் குறிவைத்து இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
பெண்களை கவர்ந்த முக்கிய அறிவிப்புகள்: தவெக தேர்தல் அறிக்கையில் பெண்களுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களே அதிக கவனம் பெற்றன. குடும்பத் தலைவியருக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதோடு ஆண்டுக்கு 6 இலவச கேஸ் சிலிண்டர்கள், அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் உள்ளிட்ட திட்டங்களும் இடம்பெற்றிருந்தன. மேலும், “மாமன் சீர்”, “அண்ணன் சீர்” போன்ற குடும்ப மரபுகளை மையமாகக் கொண்ட உதவித் திட்டங்களும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் உதவித்தொகை: வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வேலைவாய்ப்பு உருவாக்கம், தனியார் துறையில் உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை, புதிய தொழில் தொடங்க சலுகைகள் போன்ற அறிவிப்புகளும் இடம்பெற்றன. இளைஞர்களை தொழில்முனைவோராக மாற்றும் நோக்கில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஊக்கத்திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணம்: முதியோர், கைம்பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.3,000 ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் சமூக பாதுகாப்பு திட்டங்களில் பெரிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு தனி கவனம்: விவசாயக் கடன் சலுகைகள், பாசன வசதிகள் மேம்பாடு, பயிர் காப்பீடு விரிவாக்கம் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. மீனவர்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரணமாக ரூ.20,000 வழங்கப்படும் என்றும், கடலோர பாதுகாப்பு மற்றும் மீன்பிடி வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
மக்கள் நலத்திட்டங்கள்: வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.25,000 உதவித்தொகை, மாணவர்களுக்கு கல்வி உதவிகள், அரசு மருத்துவமனைகளின் தர உயர்வு போன்ற பல்வேறு நலத்திட்டங்களும் அறிக்கையில் இடம்பெற்றிருந்தன.
விஜய் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களையும் முழுமையாக அமல்படுத்த ஆண்டுக்கு ரூ.12 லட்சம் கோடி வரை தேவைப்படும் என நிதி வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர். ஆனால் தமிழக அரசின் தற்போதைய ஆண்டு பட்ஜெட் ரூ.4.39 லட்சம் கோடி மட்டுமே என்பதால், இந்த வாக்குறுதிகள் நடைமுறையில் சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
வரி வருவாயை அதிகரித்தல், மத்திய அரசிடம் கூடுதல் நிதி கோருதல், திட்டங்களை கட்டங்களாக அமல்படுத்துதல் போன்ற வழிகள் குறித்து புதிய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Read more: முதல்வர் விஜய்க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு..! Z+ல் என்ன இருக்கும்..?



