தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் கடந்த 10-ந்தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். பதவி ஏற்றதும் மக்கள் முன்னிலையில் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை, போதைப்பொருட்கள் தடுப்புப்படை ஆகிய 3 முக்கிய கோப்புகளில் கையெகழுத்திட்டார்.
அதன்படி, முதலமைச்சர் விஜய் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த 200 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் இந்த மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது. இதற்கான விவரப்பட்டியலை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. அந்த தகவலின்படி, வீடுகளில் 500 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை கடந்த 10-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
முந்தைய காலங்களில் மின்சார கட்டணமாக 210 யூனிட்டுக்கு ரூ.282 வசூலிக்கப்பட்ட நிலையில், புதிய நடைமுறையின்படி அதே பயன்பாட்டிற்கு ரூ.47 மட்டுமே வசூலிக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் 300 யூனிட்டுக்கு ரூ.705 இருந்த கட்டணம் ரூ.470 ஆகவும், 400 யூனிட்டுக்கு ரூ.1175 இருந்தது ரூ.940 ஆகவும், 500 யூனிட்டுக்கு ரூ.1805 இருந்தது ரூ.1570 ஆகவும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திட்டம் மூலம் நடுத்தர மற்றும் குறைந்த வருமானக் குடும்பங்களின் மின்சாரச் சுமை கணிசமாக குறையும் என தெரிவிக்கப்படுகிறது. மாநிலத்தில் சுமார் 2.23 கோடி நுகர்வோர் 500 யூனிட்டிற்குள் மின்சாரம் பயன்படுத்துவதாகவும், அவர்களில் பெரும்பாலோர் இந்த திட்டத்தால் பயனடைவார்கள் எனவும் கூறப்படுகிறது.
மேலும், இந்த திட்டத்திற்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.1,730 கோடி மானியச் செலவு ஏற்படும் எனவும், அரசு தரப்பில் இதற்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், 200 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கும் புதிய கட்டண முறையால் கணிசமான சேமிப்பு கிடைக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




