நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகள் இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளில் முனைப்பு காட்டி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக என மூன்று கட்சிகளும் தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுகவை பொறுத்தவரை ஏறக்குறைய காங்கிரஸ் உடன் கூட்டணி உறுதியானாலும் தொகுதிப் பங்கீடு இன்னும் முடிவாகவில்லை
இந்நிலையில், காங்கிரஸ் – திமுக இடையேயான தொகுதிப் பங்கீடு குறித்து எந்த பிரச்சனையும் இல்லை எனவும், இன்னும் ஓரிரு நாட்களில் திமுகவுடனான தொகுதிப் பங்கீடு குறித்து இறுதிகட்ட முடிவு எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிதலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
மேலும் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறப் போகிறோம். அதனால் காத்திருந்து தொகுதிப் பங்கீடு குறித்து இறுதிகட்ட முடிவு எடுப்போம். அதற்குள் சிலர் தேவையில்லாத செய்திகளை பரப்பி வருகின்றனர், இது அவர்களின் விருப்பமாக இருக்கலாம். ஆனால் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி கூட்டணியாக மக்களவைத் தேர்தலில் தொடரும், இதை யாரும் மாற்ற முடியாது என்று செல்வப்பெருந்தகை கூறினார்.