துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் அரசு / அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் தட்கல் முறை கட்டணம் இரத்து செய்து அரசாணை வெளியீடு.
அரசுத் தேர்வுகள் இயக்குநர் தமது கடிதத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயின்று மார்ச் / ஏப்ரல் பொதுத் தேர்வில் தோல்வியுற்று ஜூன் / ஜூலை துணைத் தேர்வுக்கு கால தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்களுக்கு தக்கல் கட்டணத்தை நீக்குவதன் மூலம் அரசு பள்ளிகள் மற்றும் முழுமையாக அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள் நலன் சார்ந்து ஜூன் மற்றும் ஜூலை துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் கால அளவினை 7 முதல் 15 நாட்களுக்கு நீட்டிக்கலாம்.
மேலும், மேற்காண் மாணாக்கர்களில் மட்டும் மார்ச்/ ஏப்ரல் பொதுத் தேர்வில் தோல்வியுற்று அதே கல்வியாண்டில் ஜூன் ஜூலை துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணாக்கர்களிலிருந்து தக்கல்முறை விண்ணப்பங்கள் பெறப்படும் நிலையில் அவர்களுக்கு மட்டும் தக்கல்முறை கட்டணத்தில் விலக்கு அளிக்க உரிய அரசாணை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கருத்துருவினை நன்கு பரிசீலித்து, அதனை ஏற்று மார்ச் / ஏப்ரல் பொதுத் தேர்வில் தோல்வியுற்ற மாணாக்கர்களுக்கு. ஜூன்/ஜூலை துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் கால வரம்பினை 7-லிருந்து 15 நாட்களாக நீட்டித்து நிர்ணயம் செய்தும், மேலும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களில் மார்ச் மற்றும் ஏப்ரல் பொதுத் தேர்வில் தோல்வியுற்று அதே கல்வியாண்டில் ஜூன் மற்றும் ஜூலை துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணாக்கர்களிடமிருந்து தக்கல் முறை விண்ணப்பங்கள் பெறப்படும் நிலையில் அவர்களுக்கு மட்டும் தக்கல் கட்டணத்தில் விலக்கு அளித்தும் அரசு ஆணையிடுகிறது.