போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்படுகிறார்.
ஜாபர் சாதிக் கைதும் பின்னணியும்: சர்வதேச அளவில் போதைப் பொருட்களைக் கடத்தி வந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து விவரித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், தமிழகத்தில் திரைப் பிரபலங்கள் சிலருடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாகவும், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு இணை இயக்குநர் ஞானஸ்வர் சிங் கூறுகையில், “ஜாபர் சாதிக் என்ற பன்னாட்டு போதைப் பொருள் கடத்தல் குற்றவாளி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவரது முழுப் பெயர் ஜாபர் சாதிக் அப்துல் ரஹ்மான். இவர் டெல்லி, தமிழகம் போன்ற இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து நியூசிலாந்து, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு போதைப் பொருட்களைக் கடத்தி வந்துள்ளார்.
போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தில் ஜாபர் சாதிக் திரைப்படத் தயாரிப்பு, கட்டுமானத் தொழில், ரியல் எஸ்ட்டேட், ஹோட்டல் போன்ற பல்வேறு தொழில்கள் முதலீடு செய்துள்ளார். இவருக்கு முக்கியப் பிரமுகர்கள் பலருடன் தொடர்பு உள்ளது. ஜாபர் சாதிக், 2019 முதல் போதைப் பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
கடந்தாண்டு மட்டும் 45 முறை போதைப் பொருளை கடத்தியதாகவும், அதன் மதிப்பு ரூ.2,000 கோடி எனவும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.போதை பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை வைத்து, புரசைவாக்கத்தில் ஓட்டல், ‘மங்கை’ படம் தயாரித்துள்ளதாக ஜாபர் சாதிக் தெரிவித்துள்ளார். டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக்கை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். போதைப் பொருள் தடுப்பு பிரிவின் கோரிக்கையை ஏற்று ஜாபர் சாதிக்கை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்படுகிறார். கடத்தலில் வந்த பணத்தின் மூலமாக பயன் அடைந்தவர்கள் பட்டியலை தனித் தனியாக விசாரணை செய்யவும் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.