இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (Cockroach Janata Party’ -CJP) திகாரப்பூர்வ இணையதளம் சனிக்கிழமையன்று நீக்கப்பட்டது. இந்த ஆன்லைன் கட்சியின் இயக்கத்தின் நிறுவனரான அபிஜித் தீப்கே, மத்திய அரசு சர்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டு, தங்கள் இணையதளத்தை நீக்கியுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
இளைஞர்களை இலக்காகக் கொண்டு, கிண்டல் பதிவுகள் மற்றும் ‘மீம்ஸ்’ (memes) வாயிலாக அமைப்பை விமர்சிக்கும் இந்த புதுமையான தளம், ‘Gen Z’ தலைமுறைப் பயனர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இணையதளம் நீக்கப்படுவதற்கு முன்பு, ஏறக்குறைய 10 லட்சம் இளைஞர்கள் இதில் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக அவர் சமூக ஊடகத் தளம் ஒன்றில் தெரிவித்தார்.
நாடு முழுவதும் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய NEET-UG தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, இந்தத் தளம் வாயிலாகத் தொடங்கப்பட்ட இணையவழி மனுவிற்கு, வெறும் இரண்டு நாட்களில் 6 லட்சம் கையெழுத்துகள் கிடைத்ததாகத் தீப்கே கூறினார்.
இந்த நிலையில் தங்கள் இணையதளம் நீக்கப்பட்டதால், தங்கள் குரல்களை ஒடுக்க அரசு முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர் “ அரசாங்கம் எங்களின் அடையாளச் சின்னமாகத் திகழ்ந்த இணையதளத்தை — http://cockroachjantaparty.org — முடக்கியுள்ளது.
10 லட்சம் கரப்பான் பூச்சிகள் எங்கள் இணையதளத்தில் உறுப்பினர்களாகப் பதிவு செய்திருந்தன. தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, 6 லட்சம் கரப்பான் பூச்சிகள் ஒரு மனுவில் கையெழுத்திட்டிருந்தன.
கரப்பான் பூச்சிகளைக் கண்டு அரசாங்கம் ஏன் இவ்வளவு அஞ்சுகிறது? ஆனால், அரசாங்கத்தின் இந்த சர்வாதிகாரப் போக்கு இந்தியாவின் இளைஞர்களின் கண்களைத் திறக்கத் தொடங்கியுள்ளது. எங்களுக்கான ஒரு சிறந்த எதிர்காலத்தை நாங்கள் கோரியது மட்டுமே நாங்கள் செய்த ஒரே குற்றம்.
ஆனால், எங்களை அவ்வளவு எளிதில் உங்களால் ஒழித்துவிட முடியாது. நாங்கள் தற்போது எங்களுக்கான ஒரு புதிய இருப்பிடத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். கரப்பான் பூச்சிகள் ஒருபோதும் அழிவதில்லை!” என்று குறிப்பிட்டுள்ளார்..
வெறும் 5 நாட்களில், இந்தக் கட்சியின் இன்ஸ்டாகிராம் கணக்கு 2 கோடி (20 மில்லியன்) பின்தொடர்பாளர்களைக் கடந்து, ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கணக்குகளை விட அதிக பிரபலத்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இன்று தனது தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்குடன் சேர்த்து, கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களும் ஹேக் செய்யப்பட்டதாக அபிஜித் குற்றம் சாட்டினார்.
போலிப் பட்டங்களைப் பெற்றுக்கொண்டு பணிக்கு வருபவர்கள் குறித்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் ஒரு வழக்கு விசாரணையின்போது தெரிவித்த சில கருத்துகள் தவறாகப் பரப்பப்பட்டதைத் தொடர்ந்து, இணையத்தில் கரப்பான்பூச்சி கட்சி குறித்த போக்கு (trend) தொடங்கியது. பின்னர், வேலையின்மை மற்றும் தேர்வு வினாத்தாள் கசிவுகளுக்கு எதிராக இளைஞர்கள் போராடுவதற்கான மிகப்பெரிய தளமாக இது உருவெடுத்தது. முன்னதாக, தேசியப் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT Act) பிரிவு 69A-இன் கீழ், உளவுத்துறை (Intelligence Bureau) இவர்களின் ட்விட்டர் கணக்கை முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Read More : தபால் அலுவலகத்தில் மாதம் ரூ. 9,000 சம்பாதிக்கலாம்..! நீங்கள் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்..?



