உச்சநீதிமன்றம் இன்று அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது.. அதன்படி, ஒரு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டால், அந்த தீர்ப்பை 3 மாதங்களுக்குள் அத்தீர்ப்பை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. தீர்ப்பு வழங்குவதில் ஏற்படும் தாமதம் வழக்காடிகளுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்கள், தீர்ப்பை ஒத்திவைத்த நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் அதனை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
தனிநபர் சுதந்திரம் தொடர்பான வழக்குகளில் விரைவான முடிவுகள் தேவை என்பதை வலியுறுத்திய, தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்ய பாக்ச்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜாமீன் மனுக்கள் மீதான உத்தரவுகள் அதே நாளில் வழங்கப்பட வேண்டும் என்றும், ஒருவேளை அவை ஒத்திவைக்கப்பட்டால், அடுத்த நாளே வழங்கப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டது.
தொடர் வழிகாட்டுதல்களைப் பிறப்பித்த உச்ச நீதிமன்றம், ஜாமீன் அல்லது தண்டனை ஒத்திவைப்பு தொடர்பான உத்தரவுகள் வழங்கப்பட்ட உடனேயே சிறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும், விசாரணைக் கைதி அல்லது தண்டனை பெற்றவர், முடிந்தவரை அதே நாளிலும், அதிகபட்சமாக அடுத்த நாளிலும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கூறியது.
அரசியலமைப்பின் 142-வது பிரிவின் கீழ் தனக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் இந்த வழிகாட்டுதல்களைப் பிறப்பித்தது. நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, அனைத்து உயர் நீதிமன்றங்களும் நிலுவையில் உள்ள தீர்ப்புகளை மூன்று மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஜாமீன் உத்தரவுகள் அதே நாளிலேயே வழங்கப்பட வேண்டும் என்றும், ஒருவேளை தீர்ப்பு நாளின் பிற்பகுதியில் வழங்கப்படுவதாக இருந்தால், அடுத்த நாளிலாவது வழங்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கமான ஜாமீன் உத்தரவுகள் குறித்துக் கீழ் நீதிமன்றங்கள் உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
ஜாமீன் வழங்கப்பட்ட விசாரணைக் கைதிகள், தேவையான நடைமுறைகள் பூர்த்தி செய்யப்பட்ட பிறகு, அதே நாளிலேயே விடுவிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. அனைத்துத் தீர்ப்புகளும் வழங்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் உயர் நீதிமன்றங்களின் இணையதளங்களில் பதிவேற்றப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தீர்ப்பின் முக்கியப் பகுதிகள் (operative part) எந்த நாளில் வழங்கப்படுகிறதோ, அந்த நாளே அத்தீர்ப்பின் தேதியாகக் கருதப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் மேலும் தெளிவுபடுத்தியது. ஆயிரக்கணக்கான மக்கள் நீதி தேடி வரும் முதன்மையான நிறுவனங்களாக உயர் நீதிமன்றங்கள் திகழ்வதாகவும், அங்கே தீர்ப்புகள் உரிய நேரத்தில் வழங்கப்படுவது மிகவும் அவசியம் என்றும் உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது. இந்த வழிகாட்டுதல்கள் எந்தவொரு நீதிபதி மீதோ அல்லது நிறுவனத்தின் மீதோ குறை கூறுவதற்காகப் பிறப்பிக்கப்படவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்புகள் வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள் தொடர்பான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
Read More : இந்திய ரூபாய் நோட்டு மாற்றப்பட உள்ளதா? விரைவில் பிளாஸ்டிக் நோட்டுகள்..! RBI-யின் இறுதி முடிவு..?



