தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அல்லது தனிக்கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பாஜகவின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னர், அண்ணாமலை கட்சியின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்தார்.
சமீபத்தில் சிபிஎஸ்இ (CBSE) 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான மும்மொழி கொள்கைக்கு எதிராக அவர் வெளிப்படையாக கருத்து தெரிவித்திருந்தார். இது பாஜக தேசிய தலைமைக்கு எதிரான அதிருப்தியாகவே கருதப்பட்டது. பாஜக மேலிடத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக எழுந்த தகவல்களுக்கு மத்தியில், அண்ணாமலை அவசர பயணமாக டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர்களை சந்தித்து தனது நிலைப்பாட்டை விளக்கினார். அப்போது பாஜக மேலிட தலைவர்கள், எதற்கும் அவசரப்பட வேண்டாம்.. பொறுமையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
இதனிடையே உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அண்ணாமலைக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் சுவரொட்டிகளையும் ஒட்டியுள்ளனர்.
இந்த சூழலில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகியதாகவோ அல்லது புதிய கட்சி தொடங்குவது குறித்து தன்னிடம் பேசியதாகவோ எந்த தகவலும் இல்லை” என்று தெரிவித்துள்ளார். எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ மற்றும் உறுதியான அறிவிப்புகள் அண்ணாமலை தரப்பில் இருந்து விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அண்ணாமலை மீண்டும் தமிழக பாஜக தலைவராக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. அதாவது அண்ணாமலையை தக்க வைக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் நினைக்கிறதாம்.. அண்ணாமலையை பாஜக இழக்கக்கூடாது என பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு ஆர்.எஸ்.எஸ் சமிக்ஞை அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.. ஆர்.எஸ்.எஸ் தலையீடு காரணமாகவே அன்ணாமலை டெல்லியிலேயே தங்கி இருக்கிறாராம்..
இன்று பிரதமர் மோடியையும் அண்ணாமலை சந்திக்க உள்ளார்.. மோடியிடம் இன்று பிறந்தநாள் வாழ்த்து பெறுவதுடன் தனது அரசியல் எதிர்காலம் குறித்தும் பேச முயற்சி செய்து வருகிறாராம்.
அண்ணாமலை உடன் சமரச பேச்சுவார்த்தைகளை பாஜக நடத்தி வருகிறது.. எனினும் தனிக்கட்சி தொடங்குவதில் அண்ணாமலை உறுதியாக இருக்கிறார்.. அவரை பாஜகவில் இருக்கும் பட்சத்தில், மீண்டும் தமிழக பாஜக தலைவர் பொறுப்பை வழங்கவும் பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாம்.. தற்போது தலைவராக இருக்கும் நயினார் மத்திய அமைச்சராக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது..
எனினும் அண்ணாமலை நாளை சென்னை திரும்பிய உடன் தான் உண்மை என்ன என்பது தெரியவரும்.. டெல்லி தலைமையின் சமரசத்தை ஏற்று பாஜகவிலேயே நீடிப்பாரா..? அல்லது நாளை சென்னை வந்ததும் அவர் வெளியிடப் போகும் முக்கிய அறிவிப்பு தமிழக பாஜகவை பிளவுப்படுத்துமா.. என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..



