நாடு முழுவதும் 16 நிலையான மருந்து கலவைகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகத்திற்கு மத்திய அரசு உடனடி தடை விதித்துள்ளது. சிகிச்சை ரீதியான நியாயம் இல்லாததாலும், பயனை விட ஆபத்துகள் அதிகம் இருப்பதாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Amoxicillin + Serratiopeptidase, Amoxicillin + Cloxacillin, Paracetamol + Lignocaine, Cefuroxime + Serratiopeptidase உள்ளிட்ட மருந்து கலவைகள் தடை செய்யப்பட்டுள்ளன. வலி நிவாரணிகள், ஆன்டிபயாட்டிக் மற்றும் தோல் பராமரிப்பு மருந்து கலவைகளும் தடை பட்டியலில் இடம்பெற்றுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட மருந்துகள் மட்டுமே பயன்பாட்டில் இருக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு பயனுள்ள மற்றும் அறிவியல் பூர்வமாக சரிபார்க்கப்பட்ட மருந்துகள் மட்டுமே கிடைப்பதை உறுதி செய்வதோடு, பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கவும், மருந்துகளின் பகுத்தறிவுப் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
FDC, அதாவது நிலையான கலவை மருந்துகள் என்பவை, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட செயல்படும் மருந்துப் பொருட்களின் கலவையை ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கொண்டிருக்கும் மருந்துகளாகும்.
உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்ட நிலையான கலவை மருந்துகள் மீதான ஆய்வைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (DTAB), பல்வேறு மருந்துக் கலவைகளை ஆய்வு செய்வதற்கும், தீங்கு விளைவிக்கக்கூடியவற்றைக் கண்டறிவதற்கும் ஒரு நிபுணர் குழுவை அமைத்திருந்தது.
“மனித பயன்பாட்டிற்காக அடையாளம் காணப்பட்ட 16 நிலையான கலவை மருந்துகளின் உற்பத்தி, விற்பனை, விநியோகம் மற்றும் வழங்கல் ஆகியவை நாடு முழுவதும் உடனடியாகத் தடை செய்யப்படுகின்றன.. இந்தக் கூட்டு மருந்துகளில் உள்ள அபாயங்களைக் கருத்தில் கொண்டு “பயனுள்ளதாகக் கருதப்படவில்லை” என்று தெரிவித்துள்ளது.
தடைசெய்யப்பட்ட மருந்துக் கலவைகளில், அசிடைல் சாலிசிலிக் அமிலத்துடன் எத்தோஹெப்டசைன். டைசைக்ளோமைன், பாராசிட்டமால் மற்றும் கிளிடினியம் புரோமைடு; டைசைக்ளோமைன், பாராசிட்டமால், கிளிடினியம் புரோமைடு மற்றும் குளோர்டியாசெபாக்சைடு; குரோமியம் பிகோலினேட்டுடன் கிளைக்லாசைடு; மற்றும் பாராசிட்டமாலுடன் லிக்னோகைன் போன்ற கலவைகள் அடங்கும்.
செராட்டியோபெப்டிடேஸுடன் அமோக்ஸிசிலின், செராட்டியோபெப்டிடேஸ் மற்றும் லாக்டோபேசிலஸ் ஸ்போரோஜென்ஸுடன் அமோக்ஸிசிலின், க்ளோக்ஸாசில்லின், லாக்டிக் ஆசிட் பேசில்லஸ் மற்றும் செராட்டியோபெப்டிடேஸுடன் அமோக்ஸிசிலின், புரோபெனெசிடுடன் செஃபட்ராக்ஸில், மற்றும் செராட்டியோபெப்டிடேஸுடன் செஃபுராக்ஸைம் உள்ளிட்ட பல ஆன்டிபயாடிக் அடிப்படையிலான கலவைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
தடைசெய்யப்பட்ட பட்டியலில், கற்றாழை அல்லது கற்றாழைச் சாறுடன் வைட்டமின் E, ஜோஜோபா எண்ணெய், ஆரஞ்சு எண்ணெய், கோதுமை முளை எண்ணெய், டீ ட்ரீ எண்ணெய், அலன்டோயின் மற்றும் டி-பாந்தெனால் போன்ற மூலப்பொருட்களின் கலவைகளைக் கொண்ட பல தோல் மருத்துவ மற்றும் சருமப் பராமரிப்பு ஃபார்முலேஷன்களும் அடங்கும்.
அனைத்து மாநில மருந்துக் கட்டுப்பாட்டாளர்கள், ஒழுங்குமுறை ஆணையங்கள் மற்றும் அமலாக்க முகமைகள் இந்த அறிவிப்புகளைக் கடுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் பிற பங்குதாரர்களும் சட்டத்திற்கு இணங்கத் தேவையான திருத்த நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



