சமீப காலமாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலைக்கிடமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக, பள்ளி மாணவிகள் பல்வேறு இடங்களில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் சம்பவங்கள் அடிக்கடி பதிவாகி வருகின்றன. சில நேரங்களில் வீடுகளுக்கு அருகிலும், பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளிலும் கூட இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவது பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர், டியூஷன் முடிந்து தனது தாயுடன் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, மது போதையில் இருந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் அவரிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தாயின் கண் முன்னே தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் அதிகரித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில், பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் டியூஷன் முடிந்து தனது தாயுடன் வீட்டிற்க்கு சென்றுள்ளார். அப்போது மது போதையில் வந்த நபர் ஒருவர், சிறுமியை அவரது தாயின் கண் முன்னே பாலியல் ரீதியாக சீன்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் அந்த போதை ஆசாமியின் சட்டையை பிடித்து தாக்கியுள்ளார்.
மேலும், அங்கிருந்த பொது மக்கள் போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து ஊத்துக்கோட்டை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து, ஊத்துக்கோட்டை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அவர் பேரண்ட்டூர் பகுதியை சேர்ந்த 42 வயதான ராஜா என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.



